News

அம்பாறை தேர்தல் முடிவுகளை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம் – வாக்கு எண்ணும் கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை தொடர்ந்து, வாக்குகள் எண்ணப்பட்டதில் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றன ; அதாவுல்லாஹ்

திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டார் தே.கா. தலைவர் அதாவுல்லா !

நூருல் ஹுதா உமர்

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்கள், இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கல்முனை பிராந்திய  அலுவலகத்திற்கு விஜயம் செய்து  நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை உத்தியோகபூர்வமாக  கையளித்தார்.

திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக தன்னை குறிவைத்து  பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள்  இம் மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டிருந்தது.

மனுவை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் வாக்காளர்களின் உரிமைகள் திட்டமிடப்பட்ட வகையில் மறுக்கப்பட்டதுடன் வாக்குகள் எண்ணப்பட்டதிலும் பாரதூரமான மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்றார்.

மேலும், கச்சேரியில் எமக்கு எதிரான சதி வலை பின்னல் தொடர்ந்து. ஆரம்பத்தில் காலையில் ஒரு விதமாகவும், பின்னர் வேறு ஒரு விதமாகவும் முடிவுகள் அறிவிக்கப்படலாயின. நாம் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட முடிவுகளை ஏற்று கொள்ளவில்லை. ஏற்பதாக கையொப்பம் இட்டு கொடுக்கவில்லை. வெளிப்படையாகவே ஆட்சேபித்தோம். ஆனால் புதிய ஜனநாயக முன்னணி 88 வாக்குகளால் தோற்றதாக அறிவிக்கப்பட்டது. நாம் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் என்று சட்டப்படி முறையாக கச்சேரியில் கோரினோம். ஆனால் வாக்குகளை மீண்டும் எண்ணப்படவே இல்லை. இதை ஆட்சேபித்து கொழும்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளோம். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுத்துமூலம் பல தகவல்களையும் திரட்டியுள்ளோம்.

அவசியம் ஏற்படுகின்ற பட்சத்தில் உயர்நிலை நீதிமன்றங்களில் வழக்கு நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வோம். நீதிக்கான எமது போராட்டம் தொடரும். நாம் கடந்த காலங்களில் அரசியலில் பல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வெற்றி கண்டிருக்கிறோம். என்றார். இந்த மனு கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸமும் கலந்து கொண்டதுடன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button