சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் ; பாகிஸ்தான் வீரர் முகம்மத் ஆமிர்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளரான 32 வயதுடைய முஹமட் ஆமிர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இரண்டாவது தடவை தனது ஓய்வை அறிவித்தார். இவர் பாகிஸ்தான் அணிக்காக 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 ரி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
பந்தை வேகமாக வீசுவதிலும், ஸ்விங் செய்வதிலும் வல்லவராக இருந்தார் ஆமிர். ஆனால், ஊக்கமருந்து பாவனை சர்ச்சைகளில் சிக்கி கிரிக்கெட் ஆட தடை விதிக்கப்பட்டு மோசமான நிலையையும் அடைந்தார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தார். ஆனால், கடந்த ஆண்டு ரி20 உலகக்கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் இடம் பெற வேண்டி தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார்.
T20 உலகக்கிண்ணம் முடிந்த பின் அவருக்கு பாகிஸ்தான் அணியில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது மீண்டும் ஓய்வை அறிவித்து இருக்கிறார். பாகிஸ்தான் அணி 2009 ரி20 உலகக்கிண்ணத்தை வென்றதில் ஆமிருக்கு முக்கிய பங்கு இருந்தமை குறிப்பிடத்தக்கது


