News

ஜனாஸா எரிப்பு விவகாரம் – பழிவாங்கப்பட்ட சமூகத்துக்காக தொடர்ந்து போராடும் ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

இலங்கையில் தற்போது புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், கடந்த ஆட்சியில் நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி பெற்றுக்கொள்வதோடு, மீண்டும் அவ்வாறான அநீதிகள் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

கடந்த ஆட்சியில் முஸ்லிம் சமூகத்தை மிக மோசமாக பாதித்த விடயம் கொவிட் ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.

இது கடந்த ஆட்சியாளர்கள் முஸ்லிம் சமூகத்தின் மீது காட்டிய வெறுப்பின் வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது. இது போன்ற மோசமான நிலைகள் இனியும் ஏற்பட விடக்கூடாதென்பதற்காக அன்றிலிருந்து இன்றுவரை ரவூப் ஹக்கீம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் காணலாம்.

நம்மில் பலருக்கு ஒரு சம்பவம் நடக்கும் போதிருக்கின்ற ஆர்வம் அதன் பின்னர் இருப்பதில்லை. ஜனாஸா எரிப்பின் போது காட்டிய அக்கறை அவை நிறுத்தப்பட்ட பின்னர் அவை முடிந்து விட்டதாக வேறு வேலைகள் பக்கம் கவனத்தை திருப்பிக்கொண்டோம்.

ஆனாலும், இதுவரை இவ்வலிகளை அனுபவித்த குடும்பங்கள் நீதியின்றி துயரத்தில் வாடுவதை பலரும் நினைத்துப்பார்க்க மறந்து விட்டோம். ஆனால், ரவூப் ஹக்கீம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்யவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

அன்று ஜனாஸா எரித்த போது அதனைத் தடுப்பதற்காக ஆளும் கட்சியோடு பல முறை, பல சந்தர்ப்பங்களில் பேசினார்.

ஆனாலும், அரசாங்கம் செவி சாய்க்கவில்லை. இருப்பினும் ரவூப் ஹக்கீம் ஓயவில்லை. யார்?, எப்படி? சொன்னால் கேட்குமென்பதைப் புரிந்து கொண்டு ஏனைய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் இணைத்து இரஜதந்திர ரீதியான காய்களை நகர்த்தி, போராட்டங்களைச்செய்து இறை உதவியால்  ஜனாஸா எரிப்பு விவகாரம் முடிவுக்கு வந்தது.

ஆனாலும், கடந்த அரசாங்கம் செய்த தவறை ஒப்புக்கொள்ளவில்லை. ரவூப் ஹக்கீமும் விடுவதாகவில்லை. தொடர்ந்தும் பாராளுமன்றத்தில் குரல் தொடுத்துக்கொண்டே இருந்தார்.

அப்போதைய சுகாதார அமைச்சர்களாகவிருந்த பவித்ரா தேவி வன்னியாராச்சி மற்றும் ஹெஹலிய ரம்புக்வெல்ல போன்றவர்களிடம் இது தொடர்பில் கேள்விகளை தொடுத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறு செய்ததை ஏற்றுக்கொண்டு மன்னிப்புக்கோரினாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடுகளை வழங்க முன்வராது, குறித்த விவகாரத்தோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது எவ்வித நடவடிக்கைகளுமின்றி அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டை முன்னெடுத்தது. அப்போது அதனையும் பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் கேள்விக்குட்படுத்தினார். 

ஆனாலும், எரிக்கம்பட்ட ஜனாஸாக்கள் தொடர்பான தகவல்களை வழங்குவதை அப்போதைய அரசு மறுத்து வந்தது.

இந்நிலையில், தற்போதைய புதிய அரசாங்கமானது, அன்று எதிரணியிலிருந்த போது ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் போக்கைக் கண்டித்தவர்கள் என்ற அடிப்படையில், மேலதிக நடவடிக்கைகளுக்காக குறித்த தகவல்களை தருவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் இன்றைய சுகாதார அமைச்சரிடமும் எரிக்கப்பட்ட ஜனாஸாக்களின் விபரங்களைக்கோரிய போது கடந்த அரசாங்கம் சொன்னது போல் இந்த அரசாங்கமும் பதிலளித்தமை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.

மேலும், இவ்விவகாரத்தில் அன்று தொடர்புபட்டிருந்தவர் மீண்டும் இந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் போது மீண்டுமொரு தவறு நடக்காது தடுக்கப்படும் என்பதோடு, அரசியல்வாதிகளின் அநீதியான செயற்பாடுகளுக்கு அரச நிருவாகிகள் துணை போவதற்கு அச்சப்படுவார்கள்.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதோடு, மீண்டும் இவ்வாறான மோசமான தவறு இடம்பெறாதென்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாகவும் அமையும்.

இது துன்பகரமான சம்பவம். இனி இவ்வாறான சம்பவம் நடக்காதென்பதை ஆணித்தரமாகக்கூறும் அரசு, பாதிக்கப்பட்டோர் விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடுள்ளது.

எனவே, இவ்விடயத்தில் நிரந்தரமாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் கரிசனையோடு போராடிவருவதைக் காண முடிகின்றது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button