தனது உத்தியோகபூர்வ பங்களாவில் பாத்தி தயார் செய்து கஞ்சா செடிகளை வளர்த்து வந்த அதிகாரி ஒருவர் காவல்துறையினரால் கைது

அக்கரப்பத்தனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை – கிளாஸ்கோ பகுதியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்ட உதவி அதிகாரி ஒருவர் காவல்துறையினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரப்பத்தனை காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்த உதவி தோட்ட அத்தியட்சகர் தனது உத்தியோகபூர்வ தோட்ட பங்களாவில் பாத்தியை தயார் செய்து அதனை வேலியிட்டு கஞ்சா செடிகளை நட்டு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதன் போது 11 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை சுமார் 2 அடி உயரம் வரை வளர்ந்திருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகளையும் நாளை (02) நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

