1988 – 89 ஆம் ஆண்டுகளில் தங்களது கட்டளைகளுக்கு எதிராகச் செயற்பட்ட டெவிஸ் குருகே, சாகரிகா கோமஸ், குலசிறி அமரதுங்க, பிரேமகீர்த்தி டி அல்விஸ் போன்ற ஊடகவியலாளர்களுக்கு ஜே.வி.பி துப்பாக்கியால் பதிலளித்ததை இந்தக்கட்டத்தில் நாம் நினைவு கூறுகிறோம் ; ஐக்கிய மக்கள் சக்தி

தேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி தொடர்பில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று முன்தினம் ஊடக சந்திப்பொன்றில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வீதியில் இலைக் கஞ்சி விற்பனை செய்தவருக்கு எதிராக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் காவல்துறை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டதாகக் குறிப்பிட்டார்.
இந்த செய்தியினூடாக குறித்த ஊடகம் க்ளீன் ஸ்ரீலங்கா தொடர்பான தவறான அபிப்பிராயங்களைத் தோற்றுவிப்பதாகவும், முறையற்ற ஊடக கலாச்சாரத்தைப் பின்பற்றும் அந்த ஊடகத்துக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அமைச்சரின் இந்தக் கருத்து தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தேசிய நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விடுத்துள்ள அச்சுறுத்தலை வன்மையாகக் கண்டிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதாக உறுதியளித்த தற்போதைய அரசாங்கம், தங்களது கருத்தை மதிக்காத ஊடக நிறுவனங்களை அச்சுறுத்தி, அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1988 – 89 ஆம் ஆண்டுகளில் தங்களது கட்டளைகளுக்கு எதிராகச் செயற்பட்ட டெவிஸ் குருகே, சாகரிகா கோமஸ், குலசிறி அமரதுங்க, பிரேமகீர்த்தி டி அல்விஸ் போன்ற ஊடகவியலாளர்களுக்கு ஜே.வி.பி துப்பாக்கியால் பதிலளித்ததையும் நினைவுகூருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தமது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
இன்று துப்பாக்கி ஏந்தியவாறு பதிலளிக்காவிட்டாலும் வழமை போன்று ஊடகத்துறை அமைச்சர் அச்சுறுத்தல் அறிக்கைகள் ஊடாக ஊடகங்களுக்கு அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகங்களை அச்சுறுத்தி, தனக்குப் பிடிக்காத கருத்துக்களைக் கூறுபவர்களை ஒடுக்கும் வகையில் ஊடகத்துறை அமைச்சர் செயற்படுவதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய ஊடகத்துறை அமைச்சர், இது போன்று செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

