நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்லவே ரணில் உத்தேசித்திருந்தார்…. இந்த அரசாங்கம் ரணில் வழியில் செல்லாமல் வேறு வழியை பின்பற்றினால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் ; வஜிர

நடப்பாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கும் செயற்பாடுகள் காலதாமதமாகியுள்ளதால் நிதி நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இதனால் ஏற்படும் நட்டத்தை ஈடுசெய்வதென்பது இலகுவான விடயமல்ல. எனவே, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட தேசியக் கொள்கையின் பிரகாரமே 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை இந்த அரசாங்கம் தயாரிக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாவார்கள்” என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் நேற்று (07) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்திருக்க வேண்டும். இன்றுடன் மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்த காலதாமதத்துடன் நிதியியல் செயற்பாடுகளினால் ஏற்படும் நட்டத்தை தவிர்த்துக்கொள்வது என்பது இலகுவான விடயமல்ல. அரசாங்கத்தின் விருப்பத்துக்கமைய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது.
நாட்டை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்பதற்காக கடந்த அரசாங்கத்தில் முக்கியமான பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்த சட்டதிட்டங்களுக்கமையவே இந்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியும். அதற்கப்பால், வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியாது. அந்த சட்டங்களுக்கு அப்பால் வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்தால் மீண்டும் நாட்டின் பொருளாதாரம் பின்னடைவை சந்திக்கும்.
வரவு செலவுத்திட்டத்தின் காலதாமதம் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். நவம்பர் மாதத்தில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டுச் செல்லவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தேசித்திருந்தார்.
தற்போதும் நிதிக்கான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, முன்னாள் ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைத் திட்டத்துக்கமையவே வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க முடியும் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதற்கப்பால், வேறு வழி இல்லை. அவ்வாறு இல்லாமல் வேறு வழியில் வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்தால் மக்கள் பெரும் நெருக்கடியை சந்திப்பார்கள் என்பது உறுதியாகும் என்றார்.

