News

சவூதியினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களுக்கு 33 மில்லியன் ரூபா வரி விதிப்பு

றிப்தி அலி

புனித ரமழான் மாதத்தில் இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களுக்கு சுங்கத் திணைக்களத்தினால் 33 மில்லியன் ரூபா வரி விதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

திறைசேரியினால் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த வரி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் கொழும்புத் துறைமுகத்தினை வந்தடைந்த இந்த பேரீச்சம் பழங்களுக்கான வரி தற்போது செலுத்தப்பட்டுள்ளமையினால் இன்னும் ஒரிரு தினங்களில் இவை திணைக்களத்தினை வந்தடையும் எனவும் குறித்த அதிகாரி தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள பள்ளிவாசல்களின் ஊடாக இந்த பேரீச்சம் பழங்களை முஸ்லிம் மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

ஒரு கிலோ பேரீச்சம்பழ இறக்குமதிக்கு 60 ரூபா வரி முன்னர் விதிக்கப்பட்டது. எனினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினை அடுத்து இந்த வரி 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு வரிச் சலுகை வழங்கப்படுவது வழமையாகும்.

இதற்கமைய, கடந்த 2022, 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் 199 ரூபா வரிச் சலுகை நிதி அமைச்சினால் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வந்தது. எனினும், இந்த வருடம் குறித்த வரிச் சலுகை வழங்கப்படவில்லை.

இதன் காரணமாகவே சவூதி அரேபியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பேரீச்சம் பழங்களை விடுவிப்பதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் பாரிய தொகை பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம்விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்குக்கும் இது போன்று பாரிய தொகை வரி செலுத்த வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent Articles

Back to top button