2048 ஆம் ஆண்டளவில் தனிநபர் வருமானம் 20,000 டொலராக அதிகரிக்கப்படும் – பந்துல குணவர்தன பாராளுமன்றில் அறிவிப்பு
எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
2048 ஆம் ஆண்டளவில் தனிநபர் வருமானத்தை 20,000 டொலராக அதிகரிக்கும் . அதற்கான வேலைத்திட்டங்கள் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ளன.
நாட்டில் பாரிய மாற்றத்தை கொண்டு வருவதற்கான சிறந்த அத்திவாரத்தை இடுவதற்கும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்குமான தேசிய வேலைத் திட்டமாகவே அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலை மாற்றம் சட்டத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்றியமைத்துக்கொண்டு யாருக்கும் அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாது என போக்குவரத்து, ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலைமாற்றம் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரச நிதி முகாமைத்துவம் மற்றும் பொருளாதார நிலை மாற்றம் சட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் நிதி முகாமைத்துவம், ஒழுக்கம் மற்றும் பொருளாதார முறைமை பின்பற்றப்படாவிட்டால் மீண்டும் இந்த நாடு வங்குரோத்து நிலைக்கு செல்வதை தடுக்க முடியாமல் போகும். நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்த சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
அதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை பயனுள்ள விதத்தில் உற்பத்தி செயற்பாடுகளுக்கு ஈடுபடுத்துவதும் அரசாங்கத்தின் நோக்கமாகும்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சர்வதேச ரீதியில் எமக்குள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்துடன் மேற்கொண்டுள்ள வேலைத் திட்டங்களால்தான் நாம் தற்போது சுவாசிக்க முடிகிறது. அதனால் தான் தற்போது நாட்டில் வரிசை யுகம் இல்லாமல் போயுள்ளது.
இந்த சட்டமூலத்தை எதிர்க்கும் எவராலும் எதிர்காலத்தில் இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியாது. இதன்மூலம் நாட்டில் முழுமையான மாற்றத்திற்கு தேவையான துணிச்சலான அத்திவாரம் மற்றும் அதற்கான தேசிய வேலைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
எமது நாடு 2027 ஆம் ஆண்டு வரை கடன்களை செலுத்தாமல் இருப்பதற்கு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அது தொடர்பிலான உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது. யார் ஆட்சி செய்தாலும் நாட்டின் ஆரம்ப வைப்பில் 2.5 வீதம் மேலதிகமாக இருக்க வேண்டும் என பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சபையில் உரையாற்றும்போது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை மாற்றுவதாக தெரிவித்தார். அவ்வாறு செயற்பட்டால் அவர்களுக்கு அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாமற் போகும் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.