News

துரதிர்ஷ்டவசமாக பெண்கள் மத்தியிலும் புகைத்தல் வீதம் அதிகரித்து வருவதால், இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

இள வயது பெண்களின் மத்தியில் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



அண்மைக்காலமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் பயன்பாட்டு வீதம் அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக தேசிய சுவாச விஞ்ஞான நிறுவனத்தின் விசேட சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் வைத்தியர் சமன் இத்தகொட தெரிவித்துள்ளார்.



சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



இதுதொடர்பில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,



இலங்கையை பொறுத்தவரையில், புற்றுநோய்களினால் பாதிக்கப்படுபவர்களில் நுரையீரல் புற்றுநோயினால் பாதிப்படைபவர்கள் இரண்டாவது இடத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த புற்றுநோய் ஆண்களின் மத்தியிலேயே அதிகரித்துக் காணப்பட்டது.ஆனால், தற்போது பெண்களின் மத்தியில் ஏற்படும் புற்றுநோய் வகைகளின் முதல் ஐந்து வகையான புற்றுநோய்களில், நுரையீரல் புற்றுநோயும் ஒன்றாகிவிட்டது.



60 – 70 சதவீதம் வரையிலான பெண்கள் இந்த நுரையீரல் புற்றுநோயினால் பாதிப்படைகிறார்கள். சத்திர சிகிச்சையினூடாக மருத்துவ நிவாரணம் வழங்கினாலும் அதனை சுகப்படுத்த முடியாத நிலைமை நிலவுகிறது. 10 அல்லது 15 வருடங்களுக்கு முன்னர் இருந்தது. ஆனால் தற்போதுள்ள நிலைவரங்களில் ஆண்களின் மத்தியில் புகைத்தல் வீதம் குறைவடைந்துள்ளதை ஆய்வு அறிக்கைகளில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.



ஆய்வு அறிக்கைகளின் பிரகாரம், துரதிர்ஷ்டவசமாக பெண்கள் மத்தியில் புகைத்தல் வீதம் அதிகரித்து வருகிறது. தற்போதைய தரவுகளின் அடிப்படையில் இள வயது பெண்கள் நுரையீரல் புற்றுநோய்க்குள்ளாகும் எச்சரிக்கை நிலைமை நிலவுகிறது. இந்த நிலைமை முழு ஆசிய வலயத்திலும் இருக்கிறது. இதுதொடர்பான மேலதிக ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.



நா. தினுஷா

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button