நாட்டு மக்களின் உயிரை பலியெடுக்கும் வகையில் ஒரு விடயம் இடம்பெற்று வருவதாகவும், பொதுமக்கள் தொடர்பில் மிக அக்கறையாகவும் அவதானம் வழங்கிய பொதுஜன பெரமுன M.P

‘‘நாட்டு மக்களின் உயிரை பலிகொடுக்கும் வகையில் ஒரு விடயம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் அரசையும் மக்களையும் எச்சரிக்கின்றேன். குழாய் நீரை குடிநீராக பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்’’ என பொதுஜன பெரமுன எம்.பி. டி.வி.சானக தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குழாய் நீரையே பிரதான குடிநீராக பயன்படுத்துகின்றனர். இரத்மலானை, காலி மற்றும் அம்பத்தளை ஆகிய பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.
நீரை சுத்திகரிப்பு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் அளவு தொடர்பில் இலங்கை தர நிர்ணய சபை, சுகாதார அமைச்சு மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒன்றிணைத்து வழிகாட்டல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நீரின் காரகாடித் தன்மை (pH) அளவு, பயன்படுத்தப்படும் குரோமியம் மூலப்பொருளின் அளவு தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் குரோமியம் மூலப்பொருளை இறக்குமதி செய்யும் போது இலங்கையின் துறைசார் நிபுணர்கள் குறித்த நிறுவனத்தின் நாட்டுக்கு நேரடியாக சென்று அங்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மூலப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் அவை இலங்கையின் ஆய்வுகூடங்களில் பரிசோதிக்கப்பட வேண்டும். இதற்கமைய குரோமியம் மூலப்பொருளின் கூறுகளின் அளவு 10 வீதமாக காணப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குரோமிய கூறுகளின் அளவு நீரில் அதிகரிக்கும்போது புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 27 கொள்கலன்களில் 550 மெற்றிக்தொன் குரோமியம் மூலப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை இலங்கையின் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்தபோது அதன் மூலக்கூறின் அளவு 14 ஆக காணப்பட்டுள்ளது.
குரோமியம் மூலப்பொருளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டுக்கு சென்ற தரப்பினர் இதனை அறியவில்லையா? பின்னர் இந்த மூலப்பொருட்கள் தனியார் ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அங்கும் மூலக்கூற்றின் அளவு 14 ஆக காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை தர நிர்ணய சபைக்கு அறிவுறுத்தப்பட்டு, தரத்தை மாற்றியமைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு அரசாங்கம் எவ்வாறு இடமளித்துள்ளது? குடிநீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அரசாங்கம் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.
இதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க பதிலளிக்கையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.



