Site icon Madawala News

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன் ஹம்தியின் இரு சிறுநீரகங்களும் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி கொழும்பில் மௌனப் போராட்டம்

கடந்த 2021 ஆம் ஆண்டு வைத்தியசாலையில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூன்றரை வயது நிரம்பிய சிறுவனின் சிறுநீரகம் திருடப்பட்ட சம்பவத்திற்கு நியாயம் கோரி இன்றைய தினம்(11) கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக மௌனப் போராட்டம் ஒன்று இடம் பெற்றது.

சிறுவனின் உறவுகள்,மற்றும் அப்பகுதி பெற்றோர்கள் இன்று காலை நீதிமன்ற செயற்பாடுகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக அளுத்கடை நீதிமன்றத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியாக முறையில் கவனயீர்ப்பு பேராட்டத்தை முன்னெடுத்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்த சிறுவனுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக வைத்தியரிடம் அவரை பெற்றோர்கள் கொண்டு சென்றுள்ளனர்.

வைத்திய பரிசோதனையினை மேற்கொண்ட வைத்தியர், குறித்த சிறுவனுக்கு இடது புற சிறுநீரகம் பழுதடைந்துள்ளதாகவும், சிகிச்சை செய்வதற்கு காத்திருப்பு பட்டியலில் உள்வாங்கப்படுவதாகவும் தெரிவித்தனர்

பின்னர் குறித்த சிறுவனுக்கு உடனடியாக சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் வைத்தியசாலையினால் முன்னெடுக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது

குறித்த சிகிச்சையின் பின்னர் இயந்திரத்தின் உதவியுடன் சிறுவன் வைத்தியசாலையில் இருந்த போது, திடீரென சிறுவனின் உடல் பருமன் அதிகரிக்க ஆரம்பித்தன.

இதனை அவதானித்த வைத்தியர்கள் உடனடியாக சிறுவனை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது சிறுவனின் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சிறுவனின் பெற்றோர் நீதிமன்றத்தை நாடினர்.

அதேவேளை குறித்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் நாட்டைவிட்டு வெளியேறியதாக தகவல் வந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம் மேற்படி வழக்கு விசாரணையின் தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்த போதும், இன்றைய தினம் அந்த தீர்ப்பு நீதிமன்றினால் அறிவிக்கப்படாத நிலையில் மீண்டும் இம்மாதம் 21 ஆம் திகதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version