Site icon Madawala News

தையிட்டி விகாரை விவகாரம்  –  பொது மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் ஆதரவு

பொது மக்களின் காணிகளில் அமைக்கப்பட்ட தையிட்டி விகாரையினை அகற்றக் கோரியும், பொது மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரியும்  குறித்த காணி உரிமையாளர்களினால் முன்னெடுக்கப்படும் 12.02.2025 ஆம் திகதிய நாளைய மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களும் தமது ஆதரவை வழங்குகின்றார்கள்.

விகாரை அமைக்கப்பட்டுள்ளமையினாலும், காணிகள் இதுவரை விடுவிக்கப்படாமையினாலும் தையிட்டி பிரதேச மக்கள் சொந்தக் காணியை இழந்துள்ளதுடன் தமது எதிர்கால சந்ததிகளின் நிம்மதியான வாழ்க்கை தொடர்பில் அடுத்தது என்ன? என்ற கேள்வியுடன் தவிக்கின்றதை நாம் காண முடிகின்றது. உண்மையில் 1990 ஆம் ஆண்டு வெளியேற்றத்தின் போது சொந்த நிலங்களை விட்டுச் சென்ற வடக்கு முஸ்லிம் மக்கள் அவ் வலியை நன்கு உணர்ந்துள்ளதுடன், அனுபவித்தும் உள்ளனர்.

இந்நிலையில் வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரை தொடர்பில் அரசு மக்கள் நலன்சார்ந்து முடிவெடுக்க வேண்டும்என்பதுடன், சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வேண்டும் என்றும் யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களாகிய நாமும் அரசை வலியுறுத்துவதோடு அம் மக்களின் நியாயமான கோரிக்கைக்கும், இக் கவனயீர்ப்பு நடவடிக்கைகக்கும் எமது யாழ்ப்பாணம் முஸ்லிம் மக்களாகிய நாமும் எமது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றோம்.

பொது மக்களின் காணிகள் அவ்வாறே மீண்டும் விடுவிக்கப்பட்டு பூர்விக காணி உரிமையாளர்களின் பயன்பாட்டிற்கு கையளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அக் காணிகளுக்காக மாற்றுக் காணிகளை வழங்குதல் என்பது ஒரு போது ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று என்பதுடன், அது  அநீதியான ஒரு செயற்பாடாகும் என்பதையும் அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே அம் மக்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடன் செயற்படுத்த வேண்டும் என்பதுடன், இவ் விடயம் தொடர்பில் தீவிர போக்குடைய இனரீதியான கருத்துக்களை முன்வைத்து இன முரண்பாட்டை வளர்க்கும் கடும்போக்குவாதிகளின் கருத்துக்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
நன்றி.

என்.எம்.அப்துல்லாஹ்
தலைவர் – யாழ்ப்பாணம் முஸ்லிம் இளைஞர் கழகம்

Exit mobile version