இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கம் ஆட்சியில் உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
திறமையான, பலம் பொருந்திய அரசாங்கத்திற்குப் பதிலாகப் பலவீனமான அரசாங்கத்துடன் நாடு செல்லும் திசை தற்போது தெளிவாகப் புரிவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
10 முக்கிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் கருத்து மக்களிடம் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரிசையாக முதலீடு செய்வதிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறுவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
நாட்டில் முதலீடுகள் வெளிப்படைத் தன்மையுடன் காணப்பட வேண்டும் எனவும், அரசாங்கம் முதலீட்டாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
2028 ஆம் ஆண்டுக்குள் கடனை செலுத்த வேண்டியுள்ளதால் அதுகுறித்து கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
நாடு பெற்றுக் கொண்டுள்ள கடன் மற்றும் வட்டியைச் செலுத்த வேண்டும் எனில், அதிக வருமானமும் பெரிய பொருளாதார இலக்குகளையும் அடைய வேண்டும்.
அப்போதுதான் நாம் ஒரு நாடாக மீண்டு வர முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுடன் அரசாங்கம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தங்களில் உள்ள இலக்குகளை அடையத் தவறினால் மீண்டும் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஒப்பந்தங்களில் உள்ள பலவீனங்களை ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியதாகவும், முந்தைய அரசாங்கம் செய்த தவறுகளையே இந்த அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
சமீபத்தில் பல நிபுணர்கள் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தை ஆய்வு செய்துள்ளனர்.
அந்த ஆய்வின்படி, சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 59% நாடுகள் இரண்டாவது அல்லது மூன்றாவது மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளன.
இந்த நிலை மாற வேண்டும் என்பதே தமது விருப்பம் எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மற்றொரு கடன் மறுசீரமைப்புக்குச் செல்வது நாட்டிற்குப் பேரழிவை ஏற்படுத்தும்.
குறுகிய பிரச்சினைகளை இலக்காகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி அரசியல் இலாபங்களைப் பெற முயற்சிக்காது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச,
இந்த விடயங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இலங்கையின் சமீபத்திய வரலாற்றில் மிகவும் பலவீனமான அரசாங்கம் ஆட்சியில் உள்ளது ; சஜித்
