2032 இல் பாரிய விண்கல் ஒன்று இந்தியாவில் விழப் போவதாகவும், அப்படி நடந்தால் பாரிய சேதங்கள் ஏற்படும் எனவும் தகவல் வெளியானது.

“இந்தமுறை கொஞ்சம் சிக்கல்தான்”
–ராஜ்சிவா(ங்க்)
இதை எழுத வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இல்லை. இப்டிப் பலமுறை நடந்திருந்தாலும், எதுவும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை. அதனால், இதைக் கடந்து போவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால், உடனே எழுத வேண்டிய மூன்று காரணங்கள் வந்துவிட்டன. ஒன்று, இனி ஒவ்வொருவராக இதுபற்றி எழுதிக் கொஞ்சம் பீதியைக் கிளப்புவார்கள். அதுக்கு நானே எழுதிவிடலாம். மற்றது, முதலில் 1% என்றார்கள். பின்னர் 2% என்றார்கள் நேற்று 3.1% என்கிறார்கள். படிப்படியாகச் சாத்தியம் அதிகரித்துக்கொண்டே போகிறது. மெல்லப் பயம் தொடுகிறது. இன்னும் ஒரு மாதத்தில், 10% என்று சொல்லிக் கதறினாலும் ஆச்சரியமில்லை. இந்த இரண்டு காரணங்களையும்விட, மூன்றாவதுதான் இதை எழுதவேண்டி வந்ததற்கு முக்கிய காரணம். இதன்மூலம், பாதிப்படையப் போகும் இடங்களின் பட்டியலில் சென்னையும் இருக்கிறது. சென்னை என்றால், ஈழத்திலும் பருத்தித்துறையை மெல்லத் தொடும் அபாயமும் உண்டு. அய்யய்யோ!
இவ்ளோ வலுவான காரணங்கள் இருக்க, சரி எழுதிடுவோம் என்று முடிவுசெய்து. இதோ….!
அது வேறொன்றுமில்லைங்க. 2024 YR4 என்று பெயரிடப்பட்ட விண்கல் (Asteroid) ஒன்று, வரும் 2032ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் திகதி பூமியுடன் மோதுவதற்கு, இன்றைய கணிப்பின்படி 3.1% சாத்தியங்கள் உண்டு என்று அறிவித்திருக்கிறார்கள். முதலில் 1% சாத்தியம்தான் இருந்தது. இப்போது அது படிப்படியாக அதிகரிக்கிறது. அப்படியொன்றும் பெரிய விண்கல் இல்லை. 40 முதல் 90 மீட்டர் அளவுதான். ஜுஜூபி. என்ன ரிலாக்ஸாகிட்டீங்களா? இல்லிங்க, இது தனது வேகத்துடன் மோதினால் பெரும் ஆபத்து. கிட்டத்தட்ட, எட்டு மெகா டன் டிஎன்டி (TNT) வெடித்ததுபோல இருக்கும். சென்னைபோன்ற பெருநகரமும் அதன் சுற்றுப்பகுதி நகரங்களும் ஒரே நிமிடத்தில் காலி. அதோட இது ஏற்படுத்தும் அதிர்வலைகள்…. அதுதான் உங்களுக்குத் தெரியுமே? சுனாமியிலே சுவிம் அடிச்சவங்க இல்லியா நாங்க. அதனால், என்ன நடக்குமென்று தெரியும். இதில் பிரச்சனை என்னவென்றால், இது மோதக்கூடிய இடங்களில் மும்பாயும், சென்னையும் இருக்கிறது. சுமாராக, 110 மில்லியன் மக்கள் பெரும் ஆபத்தில் இருப்பதற்குச் சொல்லப்படுகிறது.
முன்னரெல்லாம், இதுபோன்ற விண்கல் மோதலின் அறிவித்தல்கள் வரும். ஆனால் எதுவும் நடக்காது. அதுபோல இல்லை இது. மிகவும் தீவிரமானது. ஆபத்து மிகமிக அதிகம்.
வானியற்பியலாளர்கள் இதை மிகவும் முக்கியமானதும், கவலைக்கிடமானதுமாகவே பார்க்கின்றனர். ஜேமஸ் வெப் தொலைநோக்கி மார்ச் மாதம் இதைநோக்கி விசேசமாகத் திரும்பி, முழுமையான தகவல்களைத் திரட்ட்டுவதற்கு ஆயத்தப்படுகிறது. சர்வதேச விண்வெளி அவதானிப்பு அமைப்புகளான, “International Asteroid Warning Network (IAWN)”, உம் “The Space Mission Planning Advisory Group (SMPAG)” ஆகியவை இணைந்து மிகத்தீவிரமாக இவ்வின்கல்லை அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மோதும் ஆபத்து இருக்கும் பட்சத்தில், என்ன விதத்தில் இந்த அபாயத்திலிருந்து தப்பலாம் என்ற நடவடிக்கைகளுக்கான திட்டங்களும், வியூகங்களும் வகுக்கப்படுகின்றன.
இந்த 2024 YR4 விண்கல், ‘அப்போலோ மாதிரி விண்கல்’ (Apollo Type Asteroid) எனப்படுகிறது. புவிபோல இதுவும் சூரியைனைச் சுற்றிவரும் ஒரு விண்கல்தான். ஆனால், பூமியின் பாதையின் குறுக்கே இடைவெட்டியே இது பயனிக்கிறது. இதுவரை அதில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், 2032 ஆம் ஆண்டு, அக்குறுக்கீடு கிட்டத்தட்ட மோதலுக்கான அண்மையை அடைகிறது. இவ்விண்கல் 27 டிசம்பர் 2024 அன்றுதான் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விண்கல்லின் மோதல் சதவீதம் மேலும் அதிகரித்தால், ஆபத்து மிகவும் அதிகரித்துவிடும். நாம் நினைப்பதுபோல, அதை வெடித்துச் சிதறடிப்பதோ, திசை மாற்றுவதோ அவ்வளவு சுலபமில்லை இது கொஞ்சம் அளவில் பெரியது. அதனால், கடும் முயற்சிகள் தேவை. உலக நாடுகள் ஒன்று சேர்ந்துதான் ஆபத்தைத் தடுக்க முடியும்.
2032ஆம் ஆண்டு நான் இருப்பதற்குச் சாத்தியம் குறைவு. உங்களில் பெரும்பாலானோர் அந்த நிகழ்வைச் சந்திப்பீர்கள். அல்லது கடந்து போவீர்கள். எதுவானாலும், பயப்பட வேண்டாம். “அறிவியல் உங்களை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும்”.
–ராஜ்சிவா(ங்க்) அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையாளர்


