தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை ; அமைச்சரவை பேச்சாளர்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்படும் உடைகள் குறித்து அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவை ஊடக சந்திப்பில் பேசிய ஜெயதிஸ்ஸ, சில ஆடைகள் பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துமா என ஊடகவியலாளர் ஒருவர் வினவிய போதே இவ்வாறு பதிலளித்தார்.
“இதுவரை, பொலிஸ் உட்பட பாதுகாப்பு நிறுவனங்கள், எந்தவொரு உடையும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக எந்த முறைப்பாடும் அளிக்கவில்லை. ஒரு நபரின் கலாச்சார அடையாளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் விதிமுறைகளை விதிக்க நாங்கள் தயாராக இல்லை,” என்று அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட உடைகள் பயன்படுத்தப்படுவதாக பாதுகாப்பு நிறுவனங்கள் தெரிவித்தால் மட்டுமே அத்தகைய முடிவு பரிசீலிக்கப்படும் என்று ஜெயதிஸ்ஸ மேலும் கூறினார்.
“இதுவரை அத்தகைய அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை, எனவே இந்த விஷயம் பரிசீலனையில் இல்லை” என்று அவர் கூறினார்.

