News

அரசினால் முடியாவிட்டால் கிழக்கு மாகாணத்தை எம்மிடம் தாருங்கள் – நாங்கள் பார்க்கிறோம் ; பாராளுமன்றில் சாணக்கியன் வேண்டுகோள்

அரசினால் கிழக்கு மாகாண எதிர்காலத்தை மற்றும் பிரச்சனைகளை பார்க்க முடியாவிட்டால் எம்மிடம் தாருங்கள் நாங்கள் பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம்  பாராளுமன்றத்தில் சாணக்கியன் mp வேண்டுகோள்

எமது மாவட்டங்ளை பொருத்தவரையில் எமது மாவட்டங்களிலே பாரிய சிக்கல் இருக்கின்றது. நீங்கள் சோலார் பனலுக்கான காணி ஒதுக்கும்போது மிகவும் கவனமாக அந்தந்த கிராமங்களில் இருக்கும் நிலங்களின் எண்ணிக்கையை பார்த்து வழங்க வேண்டும். மின் கட்டமைப்பிற்கு (கிரிட்) அருகாமையில் இருப்பதனால் சோலார் பனலுக்கான நிலத்தை வழங்கலாம். சோலார் முக்கியம். சோலாரின் உற்பத்தி முக்கியம். ஆனால் வவுணதீவு பிரதேச செயலகத்தில் ஈச்சந்தீவு கிராமத்தை எடுத்துக் கொண்டால் ஈச்சந்தீவில் நிலமே இல்லை. ஈச்சந்தீவு கிராமத்தின் வளர்ச்சிக்கான இடமே இல்லை. எமது மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதியமைச்சருமான அருண் ஹேமசந்திர இந்த சபையில் இருக்கின்றார். நாட்டின் நன்மைக்கு சோலார் பனல் அவசியமாக இருப்பினும், அந்த கிராமத்தின் நன்மையை பாதுகாப்பது அந்த பகுதி அரசியல்வாதிகளின் பொறுப்பு. எனவே எதிர்வரும் காலங்களில் இது தொடர்பில் கரிசணையில் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இந்த துறையுடன் தொடர்புபடாத போதிலும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் அவர்களே எமது மாவட்டத்தில் நாங்கள் நீங்கள் அனைவரும் கூடி கடந்த டிசம்பர் மாதம் எடுத்த எந்தவொரு தீர்மானமும் நடைமுறைக்கு வரவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் நீங்கள் மண் அகழ்வு செய்யக்கூடாது என்று கூறினீர்கள். இன்று மண் அகழ்வு நடைபெறுகிறது. மீன்பிடி பிரச்சினை தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது. ஆனால் எதுவும் நடைமுறையில் இல்லை. உங்களுக்கு கடும் பொறுப்பு இருக்கின்றது எனக்கு தெரியும். திருகோணமலை மாவட்டத்தையும் பார்க்க வேண்டும், மட்டக்களப்பு மாவட்டத்தையும் பார்க்க வேண்டும். வெளிவிவகார அமைச்சரின் பிரதி அமைச்சராக இருப்பதால் அவர் வெளிநாடு சென்றால் பதில் அமைச்சராகவும் செயற்பட வேண்டும். அந்தவகையில் எமது மாவட்ட பிரச்சினைகள் வீதிக்கு வரும்வரையில் அதனை விட்டுவைக்க கூடாது. இன்றும் ஆரையம்பதியில் பாரிய போராட்டம் நடைபெறுகிறது. வாள் வெட்டு குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த பாதாள உலகத்தினுடைய செயற்பாடுகள் மட்டக்களப்பிலும் யாழ்ப்பாணத்திலும் நடக்கலாம் என வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சினுடைய விவாதத்தில் பதிலளிப்பதற்கு வருகை தந்த போது ஜனாதிபதி அவர்களே குறிப்பிட்டார். அந்த சூழ்நிலையில் வாள்வெட்டு குழுக்களின் செயற்பாட்டினால் இன்று ஆரையம்பதியில் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் கிழக்கில் நிர்வாகம் செய்ய முடியாவிட்டால் எமது மூத்த அரசியல்வாதிகள் இருக்கின்றார்கள் எனவே அந்த நிர்வாக பொறுப்பை எம்மிடமாவது தாருங்கள். ஏனெனில் இந்த மாவட்டங்களில் பிரச்சினைகள் வீதிக்கு வரும் வரையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு எமக்கு இருக்க முடியாது. நான் இன்று கேட்ட கேள்விகளுக்காவது பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இல்லாவிடின் எதிர்க்கட்சியாக நாளைய தினத்திலும் இதே கேள்விகளையே கேட்போம். ஏனெனில் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. கூறியவை அனைத்தும் பொய். பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து, தொடர்ந்து பொய்யின் மூலம் மாத்திரம் ஆட்சி செய்ய முடியாமல் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளமையினால் தான் நாம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாது.

Video Link
https://we.tl/t-xCj7SjO2Aw

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button