கேட்டால் கேளுங்கள்.இல்லாவிட்டால் விடுங்கள்.

#அதானியோ #அம்பானியோ, கொட்டி கிடக்கும் நம்ம #மன்னார் #மின்சார #செல்வம்
1) மன்னாரை அண்டிய கடல் வழி மற்றும் கரையில் (On & Off Shore) தயாரிக்க கூடிய மின்சாரத்தின் அளவு, இலங்கைக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் மின்சாரத்தை போன்று பல மடங்குக்கு குறையாத மேலதிக மின்சக்தி என ஆய்வறிக்கை கூறுகிறது. மேலதிக மின்சாரத்தை (Surplus Energy) வைத்துகொண்டு உள்ளூரில் ஒன்றும் செய்ய முடியாது?
2) இப்போதும் அப்படித்தானே, சூரியஒளி மின்சாரம் வீணடிக்க பட்டு, மீண்டும் மீண்டும் நிலக்கரி, எண்ணெய் மற்றும் தனியார் மின்சாரத்தை விலைக்கு வாங்குவது என ஒரு “CEB-மாபியா” பல்லாண்டுகளாக செயற்படுகிறது. அவர்கள் எப்போதும் இத்தகைய மீள்சக்தி (Renewable) மூலங்களை எப்போதும் நிராகரித்து வருகிறார்கள். இந்த மாபியா இந்த அரசாங்கம் உட்பட, எல்லா அரசாங்கங்களையும் பயமுறுத்தி வைத்துள்ளது.
3) மேலதிக மின்சாரத்தை (Surplus Energy) கொள்கலனில் போட்டு சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அனுப்ப முடியாது. ஒரே வழி, பக்கத்து தென்னிந்திய மின்சுற்றுடன் (Grid) இணைப்பதுதான். இன்று தமிழகத்தின் தொழில் வளர்ச்சி விகிதம், இந்திய தேசிய வளர்ச்சியை விட அதிகம். தமிழ்நாடு மற்றும் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய தென்னிந்திய மாநிலங்களின் தொழில் துறை வளர்ச்சிக்கு அபரித மின்சாரம் தேவை.
4) கடல்வழி இணைப்பு மூலம் தென்னிந்திய மின்சுற்றுக்கு (Grid) ஏற்றுமதியாகும் மின்சாரம் இலங்கைக்கு வருவாயை தரும். அந்த வருவாய் இலங்கை மின்சார சபைக்கு இலாப வரவாகும் போது, இலங்கையின் மின் பாவனையாளருக்கு யூனிட் விலை கணிசமாக குறையும். அது இலங்கையின் வாழ்க்கை செலவை குறைக்கும். இலங்கையின் தொழில், வர்த்தக வளர்ச்சியையும் கூட்டும். இதுதான் எதிர்காலம்.
5) இந்த காற்றாலைகளை அமைப்பது, மின்சுற்றுகளை இணைப்பது, அப்புறம் அவற்றை பராமரிப்பது, உட்பட்ட பாரிய செலவு முதலீடுகளை இந்திய நிறுவனம்தான் பொறுப்பெடுத்தது. மன்னாரின் நிலம், கடல், காற்று, இவற்றைத்தான் இலங்கை வழங்குகிறது. மன்னாரில் இருந்து கொழும்பு வரை ஒரு விநியோக சுற்று (Transmission Line) ஒன்றை அமைக்கவும் இந்திய நிறுவனம் பொறுப்பேற்றது. அதற்காக ரணில் மின்சார சட்டத்தை திருத்தினார். அதை அனுர அரசு பதவிக்கு வந்த உடன், அந்த CEB-மாபியாவின் நிர்பந்தம் காரணமாக வாபஸ் பெற்று விட்டது. அமைச்சருக்கும், அரசுக்கும் இது தொடர்பில் இன்னமும் தெளிவில்லை.
6) மன்னார் நிலத்தில் வாழும் மக்களுக்கு இதில் கட்டாயம் நன்மை கிடைக்க வேண்டும். அவர்களுக்குதான் முதலுரிமை. அதற்கு மன்னார் எம்பிக்கள், மன்னார் பிரதேச சபை, நகரசபை, வன்னி ஒருங்கிணைப்பு குழு, அல்லது வடமாகாணசபை கூடி கலந்து பேசி விசேட வரி வசூலிக்க வேண்டும்.
7) சூழல் விவகார என்ஜிஓக்கள் இப்படி எதிர்த்து கொண்டுதான் இருப்பார்கள். மட்டக்களப்பு போகும் ரயிலில் அடிபட்டு யானைகள் இறப்பதால், ரயிலை நிறுத்த முடியுமா? அபிவிருத்தி நிகழ்ந்துதான் ஆக வேண்டும். உண்மையில், இது நிலக்கரி, எண்ணெய் போன்று சூழலை அசுத்தம் செய்யாத, உலகம் விரும்பும் மீள்சக்தி (Renewable) மின்சாரம். இதை வரவேற்க தான் வேண்டும்.
😎 எங்கள் அரசாங்கம் வைத்திருந்தால், நான் இது தொடர்பில் கபினட் பத்திரம் சமர்ப்பித்து இருப்பேன். நமது அரசாங்கம் இல்லை. ஆனாலும், உண்மைகளை ஒளித்து வைக்காமல் நாடு நலன் கருதி கூறுகிறேன். கேட்டால். கேளுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள்.
9) மேலதிக மின்சாரத்தை பக்கத்து தென்னிந்திய மின்சுற்றுடன் இணைத்து ஏற்றுமதி செய்வதுதான் ஒரே வழி. சீனாகாரன் கம்பனி அல்லது இரகசிய சீன முதலீட்டுடன் கூடிய, இலங்கை கம்பனிகள் இந்த திட்டத்தை பொறுப்பெடுத்து செய்து இந்திய மின்சுற்றுடன் இணைக்க இந்திய அரசு அனுமதிக்குமா? கனவிலும் நடக்காது. அதற்குதான், அதானியோ, அம்பானியோ, ஏதோ ஒரு இந்திய கம்பனிதான் வர வேண்டும்.
10) இன்னும் பலருக்கு இந்த Windmill Renewable Energy பெருந்திட்டம் தொடர்பில் விளக்கம் இல்லை. இன்னும் சிலர் “அதானி கம்பனி மீது அமெரிக்கா வழக்கு போட்டு உள்ளது“ என இங்கே வந்து கூறுகிறார்கள். இதெல்லாம் இவர்களுக்கு என்னப்பா? அமெரிக்கன் யார் என்றும் எமக்கு தெரியுமே. Adani Green Energy என்பது ஒரு கொர்போரேட் கம்பனி. இத்தகைய கொர்போரட் கம்பனிகள் மீது உலகம் முழுக்க வர்த்தக வழக்குகள் இருக்கும். அது அவர்கள் பிரச்சினை. நீர் ஏன் அதை தலையில் வைத்து ஆடுகிறாய்? அதுபற்றி நமக்கென்னப்பா? இப்போ அந்த வழக்குக்கு தான் என்ன ஆச்சு?
11) இன்னும் சிலருக்கு அனுர அரசுக்கு எல்லாம் தெரியும் என்ற நினைப்பு. சீனாவில்தான் எல்லாம் அரசு கம்பனிகள். இங்கே இந்திய அரசு வேறு. அதானி கம்பனி வேறு. அவர்களுக்குள் இருக்கும் நெருக்கம் அவர்கள் விவகாரம். நமக்கென்ன? இந்த பிரச்சினையை இதைவிட பொறுப்புடன் கையாண்டு தீர்க்க அனுர அரசு தவறி விட்டது. இந்திய அரசு தீர்த்து வைக்க தயாராக இருந்தது. இன்று அனுர அரசு, கூடாத நட்பு மற்றும் மாபியா சொல் கேட்டு விட்டது. கேட்டால் கேளுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள்.
12) இலங்கைக்கு இதுவரை ஒரு டொலர் முதலீட்டை இந்த அரசாங்கம் கொண்டு வரவில்லை. அது தெரு போராட்டம் போல் சுலபமான வேலை இல்லை. இங்கே உள்ளூர் உற்பத்தி செலவும் அதிகம். நாம் வளர வேண்டும் என்றால் வளரும் உலகின் ஐந்தாம் பொருளாதார சக்தியுடன் சேர்ந்து வளர வேண்டும். இந்த மின்சார ஏற்றுமதி என்பது, மன்னார் மக்கள் கடல், நிலம் மூலம் எமக்கு கிடைத்த செல்வம். இப்படிதான் பூட்டான், நேபால் ஆகிய நாடுகள் இந்திய மின்சுற்றுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்கின்றன. ஒரு உதாரணம், நேபால் கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் 800 கோடி ரூபா மின்சாரத்தை இந்தியாவுக்கு விற்றுள்ளது. பங்களாதேஷ் கதை வேறு. அது இந்தியாவில் இருந்து மின்சாரம் வாங்குகிறது.
13) இங்கே சிலருக்கு இந்தியா என்றால் பிடிக்காது. அதுவும் பீஜேபி அரசு என்றால் கொஞ்சமும் பிடிக்காது. எனக்கு BJPயும் ஒன்றுதான். காங்கிரஸ் கட்சியும் ஒன்றுதான். அதானியும் ஒன்றுதான். அம்பானியும் ஒன்றுதான். எனக்கு, நமது நாடு முன்னேற வேண்டும். அவ்வளவுதான். கேட்டால். கேளுங்கள். இல்லாவிட்டால் விடுங்கள்.
#மனோகணேசன்

