News

மக்கள் பணத்தில் ஜாலிக்காக நான் வெளிநாடு செல்லவில்லை ; மைத்திரி

2015-2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவி வகித்த போது மேற்கொண்ட அனைத்து வெளிநாட்டு பயணங்களும், அரச விஜயங்களும், உத்தியோகபூர்வமற்ற வெளிநாட்டு பயணங்களும் அந்த நாடுகளின் உத்தியோகபூர்வ அழைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த பயணங்கள் ஒருபோதும் தனது சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல என்றும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

அந்த விஜயங்களின் போது தம்முடன் சென்ற அமைச்சர்கள் நாட்டுக்கு நன்மை பயக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டதாகவும், நாட்டின் துரதிஷ்டவசமாக 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்கம் அந்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.

தான் ஆட்சிக்கு வந்ததும் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகள் மற்றும் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளுடனான உறவு முற்றிலும் முறிந்து போனதாகவும் அவர் கூறுகிறார்.

அந்த அனைத்து உறவுகளையும் மீட்டெடுத்து வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்த பாடுபட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார்.

தாம் வெளிநாட்டு மாநாட்டில் பங்குபற்றிய போது ஏனைய நாடுகளின் தலைவர்கள் தம்மிடம் வந்து சிநேகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடும் அளவிற்கு தனது பதவிக்காலத்தில் பலமான வெளிநாட்டு உறவுகளை ஏற்படுத்த முடிந்தது என அவர் தனது அறிவிப்பில் வலியுறுத்தியுள்ளார்.

Recent Articles

Back to top button