இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி அவர்கள் தெரிவித்தார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் 2025.03.08ஆம் திகதி அவருடைய தலைமையில் கூடியபோதே அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி கூடியபோதே இவ்வாறு தெரிவித்தார். இதில் பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.
யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள பன்சலை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். குறித்த இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடுவதாகவும், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
சவுதி அரசாங்கத்தினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 50 மெற்றிக் தொன் பேரீச்சம் பழங்கள் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் 2 ஆயிரம் பள்ளிவாசல்களக்கு இம்முறை மிகவும் நியாயமாகப் பகிர்ந்தளிக்க முடிந்ததாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு முன்னர் பேரீச்சம் பழங்களைப் பகிர்ந்தளிக்கும் போது மோசடிகள் இடம்பெற்றதாகத் தனக்கு அறிக்கையிடப்பட்டிருப்பதாகவும், வரலாற்றில் முதல் தடவையாக நியாயமான, வெளிப்படையான முறையில் இந்தப் பகிர்ந்தளிப்பை மேற்கொள்ள முடிந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய காலாசார நிதியத்தின் கீழ் உருவாக்கப்பட்ட கலாசார பாதுகாப்பு மற்றும் கட்டுமான தனியார் நிறுவனத்தில் அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு உதவியாளர் பதவியில் பணியாற்றி வந்த ஊழியர்கள் குழுவிற்கு நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. அவர்கள் தற்காலிகப் பணியில் இணைத்துக்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் இங்கு தெரிவித்தனர்.
இருப்பினும், அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தி சம்பள நிலுவையை வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதால், மத்திய கலாசார நிதியத்திற்கு 55.9 மில்லியன் ரூபா செலுத்தவேண்டி ஏற்பட்டதாகவும், இந்தத் தீர்ப்புத் தொடர்பில் மத்திய கலாசார நிதியம் ரிட் ஆணை பெற்றுக் கொண்டமையால் குறித்த தொகையைச் செலுத்துவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும் குழுவில் தெரியவந்தது.
அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளிடமிருந்து சரியான வழிகாட்டுதல் வழங்கப்படாமையால் 2012ஆம் ஆண்டில் பணிக்கு அமர்த்தப்பட்ட இந்தக் குழு தொடர்பாக 13 ஆண்டுகளாக முறையான தீர்வொன்று காணப்படவில்லையென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுடன் பயணிக்க வேண்டிய நிலை தமது அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருப்பதாகவும், இதனைப் புத்திசாலித் தனமாகத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
கிறிஸ்தவ போதகர்களைப் பதிவுசெய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்து வரும் இந்தப் பிரச்சினையை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாகவும், கிறிஸ்தவப் பிரிவுகள், தேவாலயங்கள் மற்றும் போதகர்களைப் பதிவு செய்வதற்கான ஒரு முறை கடந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்படி, அதற்கான விண்ணப்பப் படிவங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
பஸ்நாயக்க நிலமேக்கள் மற்றும் கப்புமார்களுக்குக் கிடைக்கும் வருமானம் ஏதாவது ஒரு முறையில் நாட்டின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தக் கூடியதன் வாய்ப்புக் குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது. சப்ரகமுவ மகா சமன் தேவாலயத்தில் மாதமொன்றில் உண்டியல் மூலம் கிடைத்த வருமானம் 62 இலட்சம் ரூபா என்பது குறித்த தேவாலயத்தின் பதில் பஸ்நாயக்க நிலமேவாக நியமிக்கப்பட்டுள்ள தற்காலிகப் பொறுப்பாளரினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளதால், புதிய கண்ணோட்டத்தில் இதனை நோக்க வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நாட்டில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசல்கள் மற்றும் ஜும்மாஆ பள்ளிவாசல்களைப் பதிவுசெய்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. இந்த வருடத்தில் 3500 ஹஜ் யாத்திரிகர்கள் இலங்கையிலிருந்து செல்வதற்கான கோட்டா கிடைத்திருப்பதாகவும், ஒருவருக்கான செலவு 21 இலட்சம் ரூபா என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதில் 3 இலட்சம் ரூபா இலாபம் ஈட்டுவது நியாயமற்றது என்றும், யாத்திரிகர்களுக்கு மேலும் சலுகை வழங்குவது அவசியம் என்றும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக இம்முறை நியாயமான, வெளிப்படையான முறையில் 50 மெற்றிக் தொன் சவூதி அன்பளிப்பு பேரீச்சம் பழங்கள் 2000 பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப் பட்டன.
