கவலை வெளியிட்டு அமைச்சருக்கு முஸ்லிம் மீடியா போரம் கடிதம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் நேரம் குறைக்கப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு கடிதம் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுகுறித்து மீடியா போரம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு அதிக வருமானம் ஈட்டிக்கொடுக்கின்ற ஒரு சேவையாக முஸ்லிம் சேவை கடந்த பல வருடங்களாக காணப்பட்டு வருகின்றது.
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களினால் அதிகமாக கேட்கப்படுகின்ற வானொலி சேவையாகவுள்ள இந்த சேவையின் நேரத்தினை குறைப்பதற்கான நடவடிக்கை பல்வேறு தடவைகள் எடுக்கப்பட்ட போதிலும் அது வெற்றியளிக்கவில்லை.
இவ்வாறான நிலையில், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தற்போதைய நிர்வாகத்தினாலும் முஸ்லிம் சேவையின் நேரத்தினை குறைப்பதற்கான நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
புனித ரமழான் மாதத்தில் முஸ்லிம் சேவைக்கு அதிக நேரத்தினை ஒதுக்க வேண்டிய நிலையில், அதன் நேரத்தினை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ள விடயம் மிகவும் கவலையளிக்கின்றது.
புனித ரமழான் மாதத்தில் இரவு 7.00 மணி முதல் 8.00 மணி வரை முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவது வழமையாகும். எனினும், திடீரென கடந்த 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி முதல் 20 நிமிடங்கள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்தி ஒலிபரப்பப்பட்டுள்ளது.
இதனால், 60 நிமிடங்களைக் கொண்ட முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகள் 40 நிமிடங்கள் மாத்திரமே ஒலிபரப்பப்பட்டுள்ளன. புனித ரழமான் மாதத்தில் 6 மணி முதல் 6.30 மணி வரை இப்தார் விசேட நிகழ்ச்சி அனைத்து தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படுவது வழமையாகும்.
இதனால், இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்தி பி.ப 5.30 மணிக்கு ஒலிபரப்பப்படும். இவ்வாறான நிலையில் திடீரொன 7 மணிக்கு இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தமிழ் செய்தியை ஒலிபரப்பி முஸ்லிம் சேவையின் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளமை மிகவும் கவலையளிக்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைககளை முன்னெடுக்குமாறு உங்களிடம் மிகவும் வினமாக வேண்டிக்கொள்கின்றோம். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உங்களுடன் கலந்துரையாடலொன்றினை மேற்கொள்ள நேரம் ஒதுக்கித் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தின் பிரதிகள், மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜயசிங்க, மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இவ்விவகாரம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிஸாம் காரியப்பர் நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.
அவர் உரையாற்றுகையில், நோன்பு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இப்தார் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகிறது. முஸ்லிம் வர்த்தகர்கள் பல கோடி பெறுமதியான விளம்பரங்களை வழங்குகிறார்கள்.
இதுவரை காலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமாக ஒலிபரப்பப்பட்ட இரவு வேளைக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி நேற்று (நேற்று முன்தினம்) முதல் 45 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதனை திருத்தம் செய்து கூட்டுத்தாபனம் வழமை போல் 1 மணித்தியாலத்துக்கு இஸ்லாமிய நிகழ்ச்சியை ஒலிபரப்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.- Vidivelli