என்.எல்.எம்.மன்சூர்- ஏறாவூர்
புனித ரமழான் பாவமீட்சி பெற்று பரிசுத்தமடைவதற்காக அல்லாஹ் அளித்த அருட் கொடையாகும். பதினொரு மாதங்கள் செய்த பாவங்களை போக்க ரமழானில் நோன்பு நோற்று, தறாவீஹ் தொழுது ஏனைய அபரிமிதமான அமல்களைச் செய்து இறை அருளைப் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பமாகும்.
பகலிலே நோன்பு நோற்று இரவிலே நின்று வணங்குவதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான் என நபி ஸல் அவர்கள் கூறியுள்ளார். அதன்படி பகலிலே பசியோடும் தாகத்தோடும் அல்லாஹ்வுக்காக பொறுமையுடன் நோன்பு நோற்க வேண்டும். இரவிலே தராவீஹ் தொழுகை, ஹிஸ்பு, திக்ர், துஆ, திலாவத் போன்ற வணக்கங்களில் ஈடுபட வேண்டும். இவ்வாறு வழிபட்டு நடப்பதால் வல்லவன் அல்லாஹ்வின் நெருக்கமும் நேசமும் கிடைக்கின்றது.
இரவில் நின்று வணங்குதல்
புனித ரமழானில் மஸ்ஜிதுகளில் இஷாத் தொழுகை பிந்தியே ஆரம்பிக்கப்படும். அதனைத் தொடர்ந்து தறாவீஹ் தொழுகை நடைபெறும். தறாவீஹ் என்பது றாஹத்தாக ஆறுதலாக தொழுவதைக் குறிக்கும். இந்த றாஹத்தான அமல்களில் எத்தனை பேர் ஈடுபடுகின்றார்கள் என்பதை பார்த்தால் வேதனைப்பட வேண்டியிருக்கின்றது. சிலர் மஹ்ரிபை தாமதமாக தொழுதுவிட்டு இஷாவுக்கான நேரம் வந்ததும் தனியாகத் தொழுதுவிட்டுச் செல்வார்கள். வேறு சிலர் ஜமாஅத்துடன் சேர்ந்து இஷாத் தொழுது விட்டு தறாவீஹ் தொழாமல் சென்றுவிடுவார்கள். எஞ்சியுள்ளோர் தறாவீஹ் தொழுவார்கள்.
எமது முன்னோர்களின் முன்மாதிரி
எமது மூதாதையர்கள் நோன்பு காலத்தை மிகப்பெறுமதியாக திட்டமிட்டுப் பயன்படுத்துவார்கள். புனித ரழமான் வருவதற்கு முன்னரே பல ஏற்பாடுகளைச் செய்வார்கள். நோன்பாளி மஸ்ஜிதுகளில் அதிகமான நேரத்தை பெறுமதியான அமல்களில் ஈடுபட்டுக் கழிப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பார்கள்.
பெண்கள் பயான்
பெண்களுக்கென பள்ளிவாசல்களில் பிரத்தியேகமான பயான் நடைபெறும். காலை 10 மணியளவில் தனியொரு உலமாவைக் கொண்டு தொடர்ந்து பல விடயங்களைப் பற்றி ஹதீஸ் சொல்வார்கள். பெண்கள் மறைவாகவிருந்து கேட்டு பயனடைவார்கள். ஆண்கள் உட் பள்ளியிலிருந்து கேட்டு பயனடைவார்கள்.
நோன்பு திறக்கும் ஏற்பாடும் தறாவீஹும்
நோன்பாளி வீட்டில் நோன்பு திறப்பதால் மஃரிப் தொழுகையின் இமாம் ஜமாஅத்தை தவற விடக் கூடாதென்பதற்காக பள்ளிவாசலில் நோன்பு திறப்பதற்காக கஞ்சியுடன் சம்பலும் ஏற்பாடு செய்வார்கள். அதிகமானோர் குர்ஆன் திலாவத் திக்ர், துஆவில் ஈடுபட்டு நோன்பு திறந்து இமாம் ஜமாஅத்தாக தொழுதுவிட்டு நபில் தொழுகையில் ஈடுபடுவார்கள்.
தறாவீஹ் தொழுகைக்காக பஸாரிலுள்ள கடைகள் மூடப்படும். கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பள்ளிக்குள் நிறைந்திருப்பார்கள். இருவர் முன்வரிசையிலிருந்து சங்கை நபியின் ஸலவாத்தை சம்பவங்கள் சிறப்புகளுடன் உரத்துச் சொல்ல ஏனையோர் பதிலுக்கு ஸலவாத்தை சத்தமாகச் சொல்வார்கள். சத்தத்தால் பள்ளியே அதிரும் “சங்கை நபி மீது ஸலவாத்தை
சத்தமாய்ச் சொல்வோம் மென்றார் முஹம்மத்” என்று படிக்க கேட்டிருப்போர்
“அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத்
யாரப்பி ஸல்லி அலைஹி வஸல்லிம்” என்று கூறுவார்கள்.
தறாவீஹ் தொழுது முடிய சுவையான காவா டீ தயாராகவிருக்கும். பின்னர் ஹிஸ்பு மஜ்லிஸ் நடைபெறும். அதற்கு இமாம் பெறுப்பாகவிருப்பார். ஒவ்வொருவரும் தனித்தனி குர்ஆனை வைத்து கொஞ்சம் கொஞ்சமாக ஓதி திருத்தமாக ஓதி முடிய இடியப்பம் சம்பல் இறைச்சி கறி சொதி காத்திருக்கும்.
27ஆவது இரவு குர்ஆன் தமாம், தஸ்பீஹ் தொழுகை, திக்ர், மஜ்லிஸ் சஹர் உணவு சுபஹ் தொழுகையுடன் கலைந்து செல்வார்கள்.
பெண்கள் கூட்டமாக பல வீடுகளில் ஒன்றுகூடி தொழுவார்கள். இரவு வேளைகளில் பள்ளிக்கு வரமாட்டார்கள்.
இன்றைய நிலை
பொதுவாக இன்று மக்கள் வசதி வாய்ப்புக்கள் கூடி செல்வச் செழிப்போடு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். பெண்கள் பஸாருக்கு வந்துவிட்டார்கள். கடைகளுக்குள் கண்ணில் பட்டதையெல்லாம் கொள்வனவு செய்யத் தொடங்கிவிட்டார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கடைகளுக்குள் ஏறி இறங்குகின்றார்கள்.
போதாக் குறைக்கு இரவு பஸார் வேறு வந்து விட்டது. நோன்பு மாதம் அமலுடைய காலம், அமல்களைக் கொள்ளையடிக்கும் சந்தர்ப்பம் என்பதையும் மறந்து பகலிலும் இரவிலும் பஸாருக்குள் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமென பெருங் கூட்டம் தெருவிலே நடமாட்டம் அதிகரித்து விட்டது. கடைகளும் நேரகாலமின்றி திறந்தே இருக்கின்றன. மஸ்ஜிதுகளில் இருக்க வேண்டிய பெருங் கூட்டம் பஸாரில் அலைவதால் பல பள்ளிவாசல்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
சில வர்த்தகர்கள் தாமும் தொழுகைக்குச் செல்வதில்லை தமது ஊழியர்களையும் தொழுகைக்குச் செல்ல அனுமதிப்பதில்லை. சில தினங்களுக்கு முன்னர் கடை ஒன்றில் பணி புரியும் ஊழியர் ஒருவர் தறாவீஹ் தொழுகைக்குச் செல்ல அனுமதி கேட்டிருக்கிறார். அதற்கு இரவு 10 மணிக்கு கடையை மூடிய பின்னர்தான் செல்லாம் என கடை உரிமையாளர் தெரிவித்திருக்கிறார். இதனால் அந்தக் கடையிலிருந்து விலகி தொழுகைக்காக வந்திருந்த ஒரு இளைஞரைப் பற்றி அறியக் கிடைத்தது. இப்படியும் சில வர்த்தகர்கள் இருக்கிறார்கள்.
ஒரு சில மஹல்லாக்களைத் தவிர பல பள்ளிவாசல்களில் தறாவீஹ் அமல்களுக்கு மக்கள் குறைவாகவே கலந்து கொள்கின்றார்கள். சில பள்ளிவாசல்களில் ஐம்பது பெண்கள் தொழுதால் ஆண்கள் நான்கு அல்லது ஐவர் மட்டுமே தறாவீஹ் தொழுகின்றார்கள். இப்படியும் நாட்டில் சிறிய பள்ளிகள் ஏராளமாகவிருக்கின்றன.
தறாவீஹ் நேரத்தில் பஸாரில் விற்பதிலும் வாங்குவதிலும் ஈடுபடுவது கவலையான விடயமாகும். அமலுடைய நேரம், ஹாபிழ்கள், காரிகள், அழகிய முறையில் அல்குர்ஆனை ஓதி மனங்குளிர வைத்து அல்லாஹ்வின் உதவியையும், றஹ்மத்தையும் அடைந்து கொள்ளும் சந்தர்ப்பம் இதனைப் பறக்கணித்து துன்யாவின் பராக்கில் மூழ்கி ஆகிறாவின் தேட்டத்தை புறக்கணிப்பது நல்ல சகுனமா?
வாலிபர்கள் கூட்டங் கூட்டமாக Phone இல் விளையாடிக் கொண்டிருக்கும் காட்சிகளும் பஸாரில் காணப்படுவது பயப்படவேண்டிய விடயமாகும். குர்ஆனைப் பார்க்க வேண்டிய புரட்ட வேண்டிய கைகளும், கண்களும் பாவத்தை தேடிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலை அல்லாஹ்வின் அருளுக்குப் பதிலாக தண்டனையை இறக்கமாட்டாதென்று எப்படிச் சொல்ல முடியும்?
மாற்றத்தை ஏற்படுத்துவது யார்?
தறாவீஹ் நேரத்திற்கு மட்டும் ஜும்மாவுக்கு மூடுவது போல் கடைக்காரர்கள் மூடினால் மக்கள் பொருட்கள் வாங்கப் போகமாட்டார்கள். இதனை வர்த்தக சங்கங்கள் ஒழுங்குபடுத்த முடியாதா?
மக்கள் பஸாருக்குப் போகாமல் மஸ்ஜிதுகளுக்கு சென்று அமல் செய்வதில் ஈடுபட்டால் கடைகள் திறக்கப்படமாட்டாது. அதனை செய்வது யார்? பள்ளி நிருவாகமா? பொதுப்பணிகளில் ஈடுபடுவோர், புனித தஃவா பணி புரிவோர் ஆகியோர் இது பற்றிச் சிந்திக்க வேண்டும். மக்களை பள்ளிவாசலை நோக்கி அழைப்பதற்கான முயற்சிகள் முடுக்கி விடப்பட வேண்டும்.
எனவே தறாவீஹ் நேரத்தில் மட்டுமாவது கடைகளை மூடி பள்ளிகளை ஹயாத்தாக்கும் எமது முன்னோர்களின் முன்மாதிரியான நடைமுறைகளை எமது சந்ததிகளுக்கு அறிமுகப்படுத்த அனைவரும் முன்வருவோம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.- Vidivelli