Site icon Madawala News

பஸ்ஸினுள் மொபைல் போன் மூலம் பல்கலைக்கழக மாணவியை வீடியோ எடுத்த நபர் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைப்பு

கொழும்பு அழகியல் கலை பல்கலைக்கழக மாணவி ஒருவர் பேருந்தில் பயணிக்கும்போது, ஒரு நபர் மொபைல் போன் மூலம் அவரை காணொளி எடுத்து துன்புறுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

177  இலக்க கடுவெல-கொள்ளுப்பிட்டி  பேருந்தில்   நடந்த  இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,



மாணவி பல்கலைக்கழகத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, குறித்த வேண்டுமென்றே மாணவி அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே வந்து மொபைல் போன் மூலம் அவரை தொந்தரவு செய்துள்ளார்.



பேருந்தில் காலியான இருக்கைகள் இருந்தும், அந்த நபர் மாணவி அருகில் நின்றுள்ளார். தனது மொபைல் போனை மாணவியின் தலைக்கு மேல் உள்ள லக்கேஜ் வைக்கும் இடத்தில் வைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



இந்நிலையில் நபரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த மாணவி, தாமரை கோபுரம் அருகே இறங்க தயாரானபோது, அந்த நபரின் மொபைல் போன் இயங்குவதை கவனித்தார்.

அது தனது இருக்கைக்கு மேலே இருப்பதை பார்த்ததும், மாணவி பேருந்து ஓட்டுநரிடம் தெரிவித்ததை அடுத்து நபர் வீடியோக்களை டெலிட் செய்துவிட்டு பேருந்தில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.



பேருந்தில் இருந்து இறங்கிய மாணவி, நபரை விரட்டிச் சென்று கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து 119 போலீஸ் அவசர எண்ணிற்கு தகவல் தெரிவித்த நிலையில் பொலிசார் அந்த நபரை கைது செய்தனர்.


கைது செய்யப்பட்ட நபரின் மொபைல் போனை சோதனையிட்டதில், அவர் மாணவியை வீடியோ எடுத்த காட்சிகளை டெலிட் செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

மேலும்,  கைது செய்யப்பட்ட நபரின் மொபைல் போனை சோதனையிட்டதில், பிற பெண்களின் ஆபாச வீடியோக்கள் 30-க்கும் மேற்பட்டவை இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். 



கைது செய்யப்பட்ட நபர் ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 46 வயது நபர் என்றும், அவர் முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் இயக்குனராக பணியாற்றிய நிலையில் தற்போது தரகராக பணிபுரிவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் உணர்த்துகிறது.



இதுபோன்ற சம்பவங்களை கண்டால் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version