News

ஆனையிரவு உப்பு தொழிற்சாலையை மீள ஆரம்பித்தது வரவேற்கத்தக்கது – ஆனால் அதற்கு Raja  உப்பு என பெயர் வைத்தது அதிர்ச்சியளிக்கிறது ; சிறீதரன் MP

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார்.



குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,



வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பொருளாதார அடையாளங்களுள் ஒன்றான ஆனையிறவு உப்பளத்தை மீள ஆரம்பித்தமை காலத்தேவையான செயற்பாடாகும். 1937ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆனையிறவு உப்பளத்தில் 1938 ஆம் ஆண்டில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் ஏறத்தாழ ஒன்பது தசாப்த பாரம்பரியம் மிக்க ஆனையிறவு உப்பளத்தின் செயற்பாடுகள் இன்றுமுதல் (29) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும், ‘ஆனையிறவு உப்பு’ என்ற அடையாளப் பெயர் ‘ரஜ லுணு’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.



வடக்கு மாகாணத்தின் கைத்தொழிற் பேட்டைகளுள் முதன்மையானதும், முக்கியத்துவம் மிக்கதுமான ஆனையிறவு உப்பளம் என்பது எமது மக்களின் அடிப்படை வாழ்வியலோடு இணைந்த ஓர் அடையாளம் ஆகும். அத்தகையதோர் கைத்தொழிற் கட்டமைப்பை மீள ஆரம்பிக்கும் போது அதன் அடிப்படை அடையாளத்தை மாற்றம் செய்கின்றமை தங்கள் அரசாங்கத்தின் மீதான அபிமானத்தையும், இன நல்லிணக்கம் குறித்த தங்களின் சிந்தனைப் போக்கையும் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளது.



குறிப்பாக, கடந்த காலங்களில் இனத்துவ அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அடையாளத் திணிப்புகளைப் போலவே, எமது மொழியியல் அடையாளத்தை சிதைத்து, பெரும்பான்மையினத்தின் தனித்துவத்தை வலிந்து புகுத்தும் இன மேலாதிக்கச் செயற்பாடாகவே இதனையும் கருத வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.



கடந்த 2025.03.18 ஆம் திகதி, பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22.7 இன் கீழ், ஆனையிறவு உப்பளம் குறித்து பாராளுமன்றில் நான் கேள்வி எழுப்பியபோது வலியுறுத்தியதற்கு அமைவாகவும், எமது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்பவும் ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பினை ‘ஆனையிறவு உப்பு’ என்ற பாரம்பரிய பெயருடனேயே விற்பனை செய்வதை உறுதிசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் – என்றுள்ளது.



இதேவேளை இன்று பிற்பகல் தொலைபேசியூடாக சிறிதரன் எம்.பியை தொடர்புகொண்ட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி , மேற்படி பெயரில் மாற்றத்தை செய்வதாக உறுதியளித்துள்ளார். கடந்த அரசாங்கம் பயன்படுத்திய பெயரையே தமது அரசு முன்னெடுத்ததாகவும் தமிழர்கள் இந்த விடயத்தில் அதிருப்தியாக இருப்பார்களானால் அதனை உடனடி கவனத்திற் கொள்வதாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button