“PTA வை நீக்குவதற்கு NPP ஆதரவாளர்களும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”

PTA / பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் ருஸ்டியை விடுவிக்க வேண்டும் என்றும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து இவ்விடயத்தை PTA அல்லாத வேறு சட்ட நடைமுறைகளுக்கூடாக கையாண்டு மாற்றீட்டு நடைமுறைகளுக்கு அரசாங்கத்தை ஆள்ப்படுத்த வேண்டும்.”
PTA என்பதானது எவ்வித ஆதரம் கூட இல்லாமல் ஒரு அமைச்சரின் உத்தரவின் பெயரில் அல்லது பாதுகாப்பு படை உறுப்பினரின் வெறும் “சந்தேகத்தின்” அடிப்படையில் ஒருவரை கைது செய்து 3 மாதம் தொடக்கம் 6 மாதங்கள் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம் என்ற பாரதூரமான ஒரு விடயமாக அவதானிக்கப்பட்டு இதன் பாதகத் தன்மைகளை உணர்ந்து பலராலும் இச்சட்ட மூலம் நீக்கப்பட வேண்டும் என்றே கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு என்பது தற்போதய சூழ்நிலையில் உலகலாவிய எதிர்ப்பாகவே மாறிவருகின்ற இவ்வேளையில் இலங்கையில் ஒரு இளைஞர் இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியதை பயங்கரவாத செயலாக நாம் பார்க்க முடியாது மாறாக அது ஒரு உணர்வின் வெளிப்பாடாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால் உலகலாவிய ரீதியில் ஐரோப்பிய, அமரிக்க நாடுகளில் கூட முஸ்லீம் அல்லாதவர்களினாலும் இஸ்ரேல் எதிர்ப்பு கோசங்கள், புறக்கணிப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் என்று பல விடயங்கள் தாராளமாக நடைபெறும் இக்காலத்தில் இச் செயல்கள் எதுவும் ஒரு பயங்கரவாத செயலாக முத்திரை குத்தப்பட்டிருக்கவில்லை என்பது எமது அவதானம். இவைகளுக்கு மத்தியில் இலங்கையில் இஸ்ரேலூக்கு எதிராக ஸ்டிகர் ஒட்டியதற்காக ஒருவரை PTA வுக்கூடாக கைது செய்ய வேண்டிய எந்த தேவையும் இல்லை.
அல்லது இவ் இளைஞரின் குற்றத்தை சாதாரண குற்றவியல் சட்ட நடைமுறைகளுக்கூடாக நீதிமன்ற நடைமுறைகளுக்கு உட்படுத்தி முறையான சட்ட நடைமுறைகளினூடாக இவ் இளைஞரை ஆள்படுத்தி இவ் இளைஞருக்கான நீதியையும், இதிலுள்ள குற்றத்திற்கான தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு NPP ஆதரவாளர்கள் நாடாளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு தங்களாலான அழுத்தங்களை பிரயோகித்து இவ்விடயத்திற்கான பங்களிப்புக்களை வழங்க வேண்டும்.
இந்த அரசாங்கத்திற்கு முன்னர் கடந்த காலங்களில் அரசாங்க கட்சியில் இருந்தவர்கள் கூட அரசாங்கத்தின் தவறுவகளை பொதுவெளியில் தாராளமாக மக்கள் மன்றில் முன்வைத்த பல சந்தர்ப்பங்களை அவதானித்தும் இருக்கின்றோம். உதாரணமாக (ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் )
NPP கூட PTA வை முற்றுமுழுதாக ஒழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர், அதுமாத்திரமல்லாது NPP தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட PTA வை ஒழிப்பதாக தெரிவித்தும் உள்ளனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் NPP ஆதரவாளர்கள் இவ் PTA சட்டத்தை இல்லாமல் ஆக்குவதற்காக இவ் உள்ளூராட்சி தேர்தலைப் பயன்படுத்தி தங்களின் கோரிக்கைகள், அழுத்தங்கள் ஊடாக அரசாங்கத்தை வழிப்படுத்த முயல வேண்டும் என்பதே எமது அவா.
MLM.சுஹைல்.



