News

பயங்கரவாத அமைப்புக்களை தோற்கடித்த எனக்கு பாதாள உலகக்குழுக்களை அழிப்பது பெரிய விடயமல்ல – சரத்

எம்.மனோசித்ரா

பயங்கரவாத அமைப்புக்களை தோற்கடித்து நாட்டை மீட்க முடியுமெனில் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதொன்றும் எனக்கு பெரிய விடயமல்ல. களத்தில் இறங்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்கான பொறுப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் அதனை செய்வேன் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இராணுவத்தினரை பாதுகாப்பு பணிகளில் அமர்த்துமளவுக்கு இன்று தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை. ஆனால் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளன. அவர்கள் இன்றும் மிகவும் சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான சூழலாகும். எனவே மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை அரசாங்கம் உருவாக்க வேண்டும்.

பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது துப்பாக்கிச்சூடுகளும் மனிதப்படுகொலைகளும் அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. அனுபவம் மிக்கவர்கள் களத்தில் இறங்கினால் மாத்திரமே இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும். அரசாங்கத்துடன் இணைவதற்கு எனக்கு எந்த அவசியமும் இல்லை.

ஆனால் சில இடங்களில் நாட்டைப் பற்றி பேசும் போது அரசாங்கத்தைப் பற்றியும் பேச வேண்டியேற்படுகிறது. அரசியல் இலாபத்துக்காக தாக்குதல்களை நடத்துபவர்கள் நாம் அல்ல. ஆனால் தவறுகள் இடம்பெறும் போது அவற்றை நிச்சயம் சுட்டிக்காட்டுவோம். இதனை தெளிவாக புரிந்து கொள்ள முடியாதவர்கள் கூறும் கதைகள் தொடர்பில் நாம் கரிசணை கொள்வதில்லை.

களத்தில் இறங்கி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்கான பொறுப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் அதனை செய்வேன். ஆனால் ஆலோசகர் என்ற பெயரில் அலுவலகத்தையும் வாகனங்களையும் வழங்கும் பொறுப்புக்களை ஒருபோதும் ஏற்க மாட்டேன். பயங்கரவாத அமைப்புக்களை தோற்கடித்து நாட்டை மீட்க முடியுமெனில் பாதாள உலகக் குழுக்களை அழிப்பதொன்றும் எனக்கு பெரிய விடயமல்ல என்றார்.

Recent Articles

Back to top button