News

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது; ஜனநாயக வழியில் கருத்து வெளியிடும் உரிமையை வலியுறுத்துகின்றது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக கைது செய்யப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறது. இலங்கை எப்போதும் அனைத்து விதமான அடக்குமுறைகளுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்; குறிப்பாக பாலஸ்தீன மக்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள தொடர்ந்தேர்ச்சியான வன்முறைக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு நாடாகும்.இந்த வகையில் நாம் தன்னாதிக்கம் கொண்ட சுதந்திர பாலஸ்தீன நாடொன்றின் உருவாக்கத்தை மீண்டும் இங்கு வலியுறுத்துகின்றோம்.

அண்மையில் பலஸ்தீனத்தில் நடைபெறும் அத்துமீறல்களைக் கண்டிக்கும் வகையில் ஒரு சுவர் ஒட்டியை- ‘ஸ்டிக்கரை’ ஒட்டியதற்காக ஓர் இளைஞன் கைது செய்யப்பட்டதாக வெளிவந்த செய்திகள் சமூகத்தை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கோ அல்லது சமூக ஒருமைப்பாட்டிற்கோ அச்சுறுத்தலாக இல்லாதவரை, ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் போது அதிகாரிகள் குறித்த உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்பதையும் ஜம்இய்யா வலியுறுத்துகின்றது.

நமது பிரதிநிதிகள் இந்த கைது சம்பந்தமாக காவல்துறையினரை தொடர்புகொண்டபோது, சுவர் ஒட்டி காரணமாக மாத்திரமே குறித்த இளைஞர் கைது செய்யப்படவில்லை என்றும் கூடுதல் காரணங்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உத்தியோகபூர்வ பதிவுகளை ஜம்இய்யா கோரியுள்ளது.அவற்றை நமது செயற்குழு ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

நமது நாட்டின் அனைத்து பிரஜைகளும் தங்கள் கருத்துக்களை பொறுப்புடன் வெளிப்படுத்த வேண்டும் என்றும் தேசிய ஒற்றுமையையும் பாதுகாப்பையும் பாதிக்காதவாறு செயற்பட வேண்டும் என்றும் நாங்கள் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றோம்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாகவும் நியாயமாகவும் தீர்க்கும் வகையில் ஜம்இய்யா சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் சட்ட வல்லுநர்களுடனும் இணைந்து ஆலோசித்து வருகின்றது என்பதையும் மேலதிக தகவல்கள் கிடைக்க பெற்றவுடன், தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

ACJU Media –

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button