2029 ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்க்ஷ வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என தொகுதி அமைப்பாளர் இப்ராஹிம் சதாத் அறிவித்தார்

இந்த நாட்டை ஆட்சி செய்யக்கூடிய ஒரே தகுதியும் ஆளுமையும் ராஜபக்ச குடும்பத்துக்குதான் இருக்கின்றது என்பதை இந்த நாட்டு மக்கள் இப்போது உணர்ந்துவிட்டார்கள்.
எனவே, 2029 ஆம் ஆண்டு இந்த நாட்டின் ஜனாதிபதி தேர்தலில், நாமல் ராஜபக்க்ஷ வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என இன்று (1) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூதூர் தொகுதி அமைப்பாளர் இப்ராஹிம் சதாத் தெரிவித்துள்ளார்.
கிண்ணியா – மூதூர் ஆகிய உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக நிகழ்வு, இன்று கிண்ணியா நகர சபை விடுதியில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன பெற்ற வாக்குகள் 35 ஆயிரம் ஆகும். அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச அணி பெற்ற வாக்கு சுமார் 50 இலட்சம் ஆகும். ஆனால் அடுத்து வந்த பாராளுமன்றத் தேர்தலில் அவ்வணி சுமார் 19 இலட்சம் வாக்குகளைத்தான் பெற முடிந்தது. எனவே வாக்கு வங்கியில் இஸ்தீரமான நிலையில் பொதுஜன பெரமுன திகழ்கின்றது. இந்த நிலையில், அடுத்த ஜனாதிபதியாக வரக்கூடிய சக்தி எமக்கே இருக்கின்றது.
பொதுஜன பெரமுன என்ற அரசியல் கட்சியே, இலங்கையின் அரசியல் வரலாற்றில், அபிவிருத்தி புரட்சியை ஏற்படுத்திய ஒரே ஒரு அரசியல் கட்சியாகும்.
யுத்தத்துக்கு பின்னர், வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் என்ற கோசத்தோடு, சிறுபான்மை சமூகங்களை பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தலை நிமிர்ந்து வாழ வைத்தவர்தான் மஹிந்த ராஜபக்ஷ.
இந்த நிலையில், பொதுஜன பெரமுனயின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள், பெருமைமிக்கவர்கள் என்பதை இந்த இடத்தில் கூறி வைக்க விரும்புகிறேன்.
தேர்தல் காலங்களில் ஏனைய கட்சிகள் வெறுமெனமே இனவாத கருத்துகளையும், மதவாத கருத்துக்களையும், அத்தோடு பிரதேச வாதங்களையும் மக்கள் மத்தியில் விதைத்துவிட்டு, அவர்களின் உணர்ச்சிகளையும் இரத்த கொதிப்பையும் உருவாக்கிவிட்டுத்தான் வெற்றி பெறுகிறார்கள். இதனால் பாதிக்கப்படுபவர்கள் வாக்காளர்களே
மஹிந்த ராஜபக்ஷ 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர். அவருக்கு முன்னாள், நான்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் இருந்திருக்கின்றார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்ல. இதன் காரணமாகவே இன்று நாங்கள், அவருடைய தலைமைத்துவத்தின் பின்னால் அணி திரண்டு இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சீனக்குடா செய்தியாளர்



