இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை. (முழு விபரம் இணைப்பு)

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்துக்கும் அவரது தனிப்பட்ட செயலாளருக்கும் தலா 16 ஆண்டுகள் கொழும்பு உயர் நீதிமன்றம் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
2012 செப்டம்பர் 27 முதல் 2014 டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில், மாகாண சபையின் முதலமைச்சராகப் பணியாற்றிய சந்தேகநபர் எஸ்.எம். ரஞ்சித், முதலமைச்சரின் தனிப்பட்ட செயலாளரின் சம்பளத்துடன் எரிபொருள் கொடுப்பனவு சேர்க்கப்பட்டிருந்த போதிலும், அதனை மீறி சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 26 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாகவும், அதற்கு உதவி மற்றும் ஆதரவு வழங்கியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, எஸ்.எம். ரஞ்சித் மற்றும் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு எதிராக “ஊழல்” என்ற குற்றச்சாட்டின் கீழ் லஞ்ச ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்பட்ட எரிபொருளின் அளவு 16,784 லீட்டர்கள் என்பது வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
தண்டனை விதிப்பதற்கு முன் நீதிமன்றத்தில் வாதங்கள்
தண்டனை விதிப்பதற்கு முன்னர், லஞ்ச ஆணைக்குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதிடுகையில், இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான முன்னாள் முதலமைச்சர், மக்கள் வாக்குகளால் வடமத்திய மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர் என்பதை சுட்டிக்காட்டினார்.
“இவர் அனுராதபுர மாவட்டத்தில் இருந்து மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர். அனுராதபுர மாவட்டம் என்பது சற்று கடினமான வாழ்க்கை நிலைமைகள் கொண்ட பகுதி. அங்கு பெரும்பாலும் விவசாயிகள் வாழ்கின்றனர். இவ்வாறு கஷ்டப்படும் மக்கள் வாழும் பகுதியில், மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள், பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தி இந்த ஊழல் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
2012 ஆம் ஆண்டு இவர் தவறாகப் பயன்படுத்திய பணத்தின் மதிப்பு 26 லட்சம் ரூபாவுக்கு மேல். தற்போதைய மதிப்பில் அது இன்னும் அதிகமாகும்,” என அந்த வழக்கறிஞர் தெரிவித்தார். இந்தக் குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சந்தேகநபர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
சந்தேகநபர்கள் சார்பில் வாதம்
சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது 2012 ஆம் ஆண்டு நடந்த குற்றம் எனவும், சந்தேகநபர்கள் வழக்கை விரைவாக முடிவுக்கு கொண்டுவர முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை கருத்தில் கொண்டு, தனது சேவைதாரர்களுக்கு (சந்தேகநபர்களுக்கு) தளர்வான தண்டனை வழங்க வேண்டும் என அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.
நீதிபதியின் தீர்ப்பு
பின்னர் தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி, “பிற குற்றங்களுக்கு தண்டனை விதிக்கும் போது பின்பற்றப்படும் நடைமுறைகளை இந்த வழக்கில் பின்பற்ற முடியாது. இந்த வழக்கு ஒரு பொருளாதாரக் குற்றத்தை வெளிப்படுத்துகிறது. முதல் சந்தேகநபர் மக்கள் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர்.
அவர் மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய வகையில் நடந்து கொள்ள வேண்டிய கடமை உள்ளது. ஊழல் செயல்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கடந்த காலத்தில் நமது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு, நாட்டில் நடக்கும் ஊழல் செயல்களும் ஒரு காரணமாக அமைகின்றன.
எனவே, இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் தொடர்பில் தளர்வாக செயல்பட முடியாது. அவர்களுக்கு சட்டத்தால் வழங்கக்கூடிய அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டியுள்ளது,” என தெரிவித்தார்.
தீர்ப்பு மற்றும் மேல்முறையீடு
இதனைத் தொடர்ந்து தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இந்த தீர்ப்புக்கு எதிராக சந்தேகநபர்கள் மேல்முறையீடு செய்யலாம் எனவும் பகிரங்க நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.
மேலும், சந்தேகநபர்களின் கைரேகைகளை பதிவு செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

