News

அமெரிக்க வரி விதிப்பு குறித்து ஆராய உடனடியாக விசேட  நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். அந்த குழு வொஷிங்டன் சென்று ஜனாதிபதி ட்ரம்ப்பை உடனடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ; சஜித்

இன்றைய நிலவரப்படி, உலகின் அனைத்து நாடுகளிற்குமான புதிய இறக்குமதி வரியை ஐக்கிய அமெரிக்க குடியரசு அறிவித்துள்ளது. வர்த்தக நிலுவையை கொண்டுள்ள நாடுகளிற்கு அமெரிக்கா அதிகளவு வரிகளை விதித்துள்ளது. இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.



முழு நாட்டையும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தையும் கவலையடையச் செய்துள்ள இந்த விடயம் குறித்து பல மாதங்களுக்கு முன்னரே நாம் எச்சரித்திருந்தோம். இருந்த போதிலும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை.

இது தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசும்போது, ஒலிவாங்கியை துண்டித்து, எம்மை பரிகசித்து தற்காலிக மகிழ்ச்சியை அரசாங்கம் பெற்றுக்கொண்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



நமது நாட்டின் மீது 44 சதவீத வரியை விதித்ததன் மூலம் நமது நாட்டின் ஏற்றுமதி பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளது. குறிப்பாக ஆடைத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக, ரணசிங்க பிரேமதாச அவர்களால் நிறுவப்பட்ட 200 ஆடைத் தொழிற்சாலைகளும், எமது நாட்டின் ஏற்றுமதித் துறையை நம்பி வாழும் இலட்சக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளும் ஆபத்தில் காணப்படுகின்றன.

அரசாங்கம் இவற்றை கவனத்திற்கொள்ளாது செயல்பட்டு வருகின்றன. அரசாங்கம் வழமையான பொய்களை கூறி மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்றி வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



இந்த விடயங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் முன்வைத்த போது, இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு விசேட தூதுக் குழுவொன்று அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது. அரசாங்கத்தால் எப்போது இவ்வாறான ஒரு தூதுக் குழு அனுப்பட்டது? இதற்காக அனுப்பப்பட்ட தூதுக் குழு உறுப்பினர்கள் யார் ? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. மேலும் பொய் சொல்லாமல் இந்த தூதுக்குழுவின் மூலம் அடைந்துள்ள முன்னேற்றத்தை வெளிப்படுத்துங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.



“தொலைதூரம் காண்போம்-அணி திரள்வோம் -எதிர்காலத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு  (03) கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு மாநாட்டு உரையை நிகழ்த்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.



உடனடியாக ஒரு சிறப்புக் தூதுக் குழுவை அமெரிக்காவுக்கு அனுப்புங்கள்!
நமது நாட்டின் ஏற்றுமதியைப் பாதுகாக்க விசேட திட்டமொன்று தேவையாகும். வர்த்தகம் தொடர்பிலான விசேட பிரதிநிதி மற்றும் சர்வதேச வர்த்தகம் தொடர்பிலான விசேட நிபுணர்கள் குழுவை நியமித்தது அவர்களை உடனடியாக வாஷிங்டனுக்கு அனுப்புங்கள். அமெரிக்க ஜனாதிபதியோடு கலந்துரையாட வேண்டும். இது தொடர்பில் முன்னரும் பல தடவைகள் அரசாங்கத்திடம் எடுத்துரைத்த போதிலும், அரசாங்கம் அதனை பொருட்படுத்தவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தொழிற்சாலைகளைப் பாதுகாக்க அரசாங்கம் முன்வராவிட்டால், எதிர்க்கட்சியாகிய நாம் முன்வருவோம்.
நாட்டிற்கு பலமும் பயனும் தரும் இராஜதந்திர உறவுகளை முன்னெடுக்க இந்த அரசாங்கத்திற்கு எந்த இயலுமை இல்லை. எமது நாட்டின் ஏற்றுமதிக்கு அழிவு ஏற்பட்டுள்ள இந்த வேளையில், தொழிற்சாலைகளில் பணியாற்றும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் தமது தொழிலை பாதுகாத்துத் தர பொறுப்பான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி உங்களுக்காக தனது கடமைகளை நிறைவேற்றும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கோட்டா நாட்டை வங்குரோத்தடையச் செய்தார். அனுர அரசியலை வங்குரோத்தடையச் செய்தார்.
2019 இல் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி நாட்டை வங்குரோத்தடையச் செய்தது போல், 2024 இல் ஆட்சிக்கு வந்த மக்கள் விடுதலை முன்னனணியின் ஜனாதிபதி ஒட்டுமொத்த அரசியலையும் வங்குரோத்தடையச் செய்துள்ளார். பொய்யினாலும் ஏமாற்றினாலும் மக்களின் நம்பிக்கையை சிதறடித்து இன்றைய முழு அரசியலையுமே வங்குரோத்தடையச் செய்து விட்டார். பெரும் மக்கள் ஆணையைப் பெற்ற தற்போதைய ஆளுந்தரப்பினர், அரச ஊழியர்கள், ஓய்வு பெற்ற சமூகத்தினர் உட்பட சாதாரண மக்களை எல்லா வகையிலும் ஏமாற்றியுள்ளனர். அவர்கள் உருவாக்குவதாகச் சொன்ன மறுமலர்ச்சி இதுவாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மக்கள் எதிர்பார்த்த மறுமலர்ச்சி இதுதானா?
முந்நூறுக்கும் மேற்பட்ட கொல்களன்களை எந்த இரக்கமும் இன்றியும், எந்தப் பரிசோதனைகளும் இன்றியும் இஷ்டத்துக்கு விடுவித்துள்ளனர். இன்று ஒட்டுமொத்த சமூகமும் குற்றவாளிகளின் பிடிகளில் சிக்கும் வரை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த மறுமலர்ச்சி யுகம் இதுவல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button