இலங்கையில் தினமும் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவு – வருடத்திற்கு குறைந்தது பத்தாயிரம் பேர் உயிரிழப்பு

இலங்கையில் நாளாந்தம் 30 முதல் 35 வரையான, விபத்துகளுடன் தொடர்புடைய மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சுத் தெரிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையில் 10,000 முதல் 12,000 பேர் வரை வருடாந்தம் விபத்துகளால் உயிரிழப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவலுக்குப் பின்னர் 2019ஆம் ஆண்டு முதல் விபத்துகள் மற்றும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2019ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்தம் விபத்துகளால் பாதிக்கப்பட்ட 1.3 மில்லியன் பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை தற்போது ஒரு மில்லியனாக உள்ளது.
எவ்வாறாயினும் தற்போதைய போக்கின்படி, அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் குறித்த எண்ணிக்கை 2 அல்லது 3 இலட்சத்தால் அதிகரிக்கலாம்.
இதனை மாற்றியமைப்பதற்கு ஒருங்கிணைந்த திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சமிதா சிறிதுங்க தெரிவித்துள்ளார்

