டொமினிக்கன் குடியரசு இரவுநேர கேளிக்கை விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 218 ஆக அதிகரிப்பு

மேற்கு இந்தியத் தீவுகள் பிராந்தியத்தில் அமைந்துள்ள டொமினிக்கன் குடியரசின் தலைநகா் சான்டோ டமிங்கோவில், இரவு விடுதியொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 218-ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து பேரிடர் மீட்புக் குழுவினா் நேற்று வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
கூரை இடிந்து விழுந்த இரவு விடுதியில் இடிபாடுகளில் உயிருடன் புதைந்திருக்கக்கூடியவா்களைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. ஆனால் அங்கிருந்து யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை.
கான்கிரீட் கூரையின் இடிபாடுகளில் இருந்து மேலும் பல சடலங்கள் மீட்கப்பட்டதைத் தொடா்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை 218-ஆக உயா்ந்துள்ளது என்று அவா்கள் கூறினா்.
இதற்கிடையே, விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 24 போ் சுயநினைவில் இல்லாததால் அவா்களின் அடையாளம் தெரியவில்லை என்று கூறிய மருத்துவா்கள், அவா்களில் 8 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தனா்

