அமெரிக்காவால் சீனாவுடன் மோத முடியாது..- டில்வின்

உலகம் முழுவதற்கும் பொருந்தும் என அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இலங்கையை பொறுத்தமட்டில் பெரிய விடயமல்ல என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் திரு டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான நாட்டின் ஏற்றுமதி சிறியது எனவும், அவற்றில் பெரும்பாலானவை ஆடைகள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆடைத் தொழில்துறை தொழிலாளர்கள் வேலையிழந்தால் அவர்களுக்கு வேறு வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இணைய சேனலொன்றில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவினால் திணிக்கப்படும் முறைமைகளை நீண்டகாலமாக பேண முடியாது எனவும், அந்த வரியால் உலகமே பாதிக்கப்படுவதுடன் அமெரிக்காவும் பாதிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சீனாவுடனான வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றிபெற முடியாது என்றும், அந்தப் போரில் இருந்து அமெரிக்கா வீழ்ந்துவிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக அமெரிக்க அதிபரின் இந்த தவறான முடிவை விரைவில் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

