பொது மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்க அரச மருந்தகங்களை நிறுவப் போவதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு

நாட்டிலுள்ள 130 இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளையும், முன்னனி தனியார் மருத்துவமனைகளையும் தொடர்புப்படுத்தும் வகையில் அரச மருந்தகங்களை நிறுவுவதற்கான ஒரு திட்டம் எதிர்காலத்தில் செயற்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்களுக்கு நியாயமான விலையில் தரமான மருந்துகளை வழங்குவதே இதன் நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு முழுவதும் மருந்துகளை பெற்றுக்கொள்வதற்காக 68 விலைமனுக்களை மட்டுமே வெளியிட்டுள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபனம், இந்த ஆண்டின் முதல் 05 மாதங்களில் 268 விலைமனுக்களை கோரியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கொள்முதல் செயல்முறையை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பதன் விளைவாக, அடுத்த ஆண்டு அரச மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட முறையிலும் உயர் தரத்துடனும் வழங்க முடியும் எனவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



