வெலிகம பிரதேச சபை தவிசாளரை சுட்டுக் கொன்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் காட்டு வழியில் தப்பி செல்லும்போது கோளாறு ஏற்பட்டு நின்றது – அப்போது யானை ஒன்று எம்மை தாக்க வந்தது.. அங்கிருந்து தப்பி கெக்கிராவை சென்றோம் ; பிடிபட்டவர்களின் வாக்குமூலம்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், துப்பாக்கிதாரி பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (31) கண்டுபிடித்துள்ளனர்.
கதிர்காமம்-புத்தல வீதியில் உள்ள 16 ஆவது மைல்கல் அருகே உள்ள காட்டுப் பகுதியில் இந்த மோட்டார் சைக்கிள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் அம்பலாந்தோட்டை பகுதியை அடைந்து, அங்கிருந்து கதிர்காமம்-புத்தல வீதி வழியாக கெக்கிராவ பகுதிக்குச் சென்றுள்ளனர் என்று அவர்களின் வாக்குமூலங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
கெக்கிராவ பகுதிக்குச் செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நின்றுவிட்டதாகவும், அதனால் அவர்கள் அதனைப் பாதையோரக் காட்டில் இட்டுச் சென்றதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் கூறுகிறது.
மோட்டார் சைக்கிளில் கோளாறு ஏற்பட்டபோது, அந்த இடத்தில் மறைந்திருந்த காட்டு யானை ஒன்றின் தாக்குதலுக்குச் சந்தேகநபர்கள் ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், அவர்கள் ஓடிச் சென்று தாக்குதலில் இருந்து தப்பியதாகவும் அவர்களின் வாக்குமூலங்களில் குறிப்பிட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் நேற்று (31) அந்த இடத்திற்குச் சென்ற குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், மோட்டார் சைக்கிளை கண்டுபிடித்து, அதனை கதிர்காமம் காவல்துறையிடம் ஒப்படைத்தனர்



