சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ஹெராயினை வைத்திருந்த பாடசாலை அதிபர் கைது #இலங்கை

அனுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலையின் அதிபர் ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவலை, நல்லமுதாவ வீதியில் கைது செய்யப்பட்ட 30 வயதுடைய ஒருவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அனுராதபுரம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இதன்போது, சம்பந்தப்பட்ட அதிபருக்கு சொந்தமானது எனக் கூறப்படும் எப்பாவலை, அதகல பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்றின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், அதிபரால் அருகிலுள்ள குளத்தில் வீசப்பட்ட போதைப்பொருட்களை அளவிடப் பயன்படுத்தப்படும் இலத்திரனியல் தராசு மற்றும் பொலித்தீன் சீலர் இயந்திரம் ஆகியவற்றையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிபரின் மனைவி தேசிய மக்கள் சக்தியின் பேலியகொட நகர சபையின் உறுப்பினராவார் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், குறித்த அதிபரின் மகன் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து அனுராதபுரம் பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



