News

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் மட்டும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  85 ஆக அதிகரித்தது

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் பதுளை மற்றும் கண்டி மாவட்டங்களில் மட்டும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 85 ஆக அதிகரித்துள்ளது.


மேலும், சீரற்ற காலநிலை காரணமாக இன்றும் பல இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளன.
கண்டி ஹசலக, பமுனுபுர பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 05 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்துடன், பதுளை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை காரணமாக 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மண்சரிவு காரணமாக 27 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில், கேகாலை புலத்கோஹுபிட்டிய, தேதுகல பிரதேசத்தில் 05 வீடுகள் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன.
அந்த வீடுகளில் இருந்த சுமார் 12 பேர் காணாமல் போயுள்ளதுடன், அந்த இடத்திற்கு செல்வது சிரமமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி மாத்தளை கம்மடுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளதுடன், அதன் அளவு 540.6 மில்லிமீட்டராக பதிவானது.


அதுமட்டுமின்றி மாத்தளை கந்தேனுவர, கேகாலை டொத்தலோயா தோட்டம், கண்டி நில்லம்பே மற்றும் கண்டி மாரஸ்ஸன ஆகிய பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 400 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பதிவாகியுள்ளது.


‘தித்வா’ சூறாவளியின் தாக்கம் காரணமாக பல மாவட்டங்களில் இன்றும் பலத்த மழை பெய்து வருகிறது.


இந்த பலத்த மழையால் மகாவலி, களனி, களு மற்றும் மாணிக்க கங்கைகளை அண்மித்த பகுதிகள் மற்றும் தெதுரு ஓயா, மகா ஓயா, கலா ஓயா மற்றும் மல்வத்து ஓயா ஆகியவற்றை அண்மித்த பல பகுதிகளில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


களு கங்கையின் நீரேந்தும் பிரதேசத்தில் பெய்து வரும் அதிக மழையினால் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மடுல்ல, நிவித்திகலை, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம, எலபாத்த உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.


களுத்துறை மாவட்டத்திலும் களுத்துறை, இங்கிரிய, ஹொரணை, தொடன்ங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, பாலிந்தநுவர, மதுராவல மற்றும் அகலவத்தை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன், பேராதனை மற்றும் நாவலப்பிட்டி பிரதேசங்களில் மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


இதேவேளை, அத்தனகலு ஓயா நீரேந்தும் பிரதேசங்களில் பல இடங்களில் தற்போது அதிக மழைவீழ்ச்சி பதிவாகி வருவதால், கம்பஹா நகரத்திற்கு விசேட வெள்ள அபாய எச்சரிக்கை ஒன்றை நீர்ப்பாசனத் திணைக்களம் இன்று மாலை விடுத்துள்ளது.


அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா பள்ளத்தாக்குகளின் தாழ்நிலப் பகுதிகளில் அடுத்த சில மணிநேரங்களில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்த நிலையில் இருந்து உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button