இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) தாய்லாந்தின் சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் ஹலால் விஞ்ஞான மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவை (HAC) தாய்லாந்தின் சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் ஹலால் விஞ்ஞான மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
இலங்கை ஹலால் சான்றுறுதிப் பேரவையானது (HAC) தாய்லாந்தில் உள்ள புகழ் பெற்ற சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் (Chulalongkorn University) ஹலால் விஞ்ஞான மையத்துடன் ஒரு முக்கியமான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஹலால் சான்றிதழின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள தாய்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டின் மூலம் இலங்கையிலிருந்து தாய்லாந்து சென்ற இப்பேரவையின் பிரநிதிகள் குழுவின் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கடந்த 2024 ஓகஸ்ட் 28 ஆம் திகதி இந்த முக்கிய ஒப்பந்தம் கைமாற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் சூலலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தின் ஹலால் விஞ்ஞான மையத்தின் ஸ்தாபகப் பணிப்பாளர் பேராசிரியர் Dr. Winal Dahlan மற்றும் இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (CEO) ஆக்கிஃப் ஏ வஹாப் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட போது..
இலங்கையின் ஹலால் சான்றுறுதிப் பேரவையின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான (CEO) ஆக்கிஃப் ஏ வஹாப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தாய்லாந்திற்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான திருமதி ஈ.ஏ.எஸ். விஜயந்தி எதிரிசிங்க அவர்களிடம் கையளித்த போது.
இந்த கூட்டாண்மையானது இரு நிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்பதோடு, இது ஹலால் விஞ்ஞான மையத்தினால் வழங்கப்படும் மேம்பட்ட சோதனைச் சேவைகளை வணிக ரீதியாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. மதுசாரம் (Ethanol) உள்ளடக்கம் உள்ளதா எனும் சோதனை, பன்றி கூறுகள் (Porcine) கண்டறிதல் மற்றும் GCC நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கையின் ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளை சரிபார்ப்பதற்கு அவசியமான ஏனைய அத்தியாவசிய பகுப்பாய்வுகள் ஆகிய விடயங்கள் இந்த சேவைகளில் அடங்குகின்றன.
HAC மற்றும் ஹலால் விஞ்ஞான மையம் ஆகியவற்றுக்கு இடையேயான இந்த ஒத்துழைப்பானது, இரு அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பரஸ்பர ஆதரவின் அடிப்படையில் உருவானதாகும்.
நாடு முழுவதும் பரவலாக நுகரப்படும் முழு ஆடைப் பால்மாவில் பன்றிக் கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய் (Palm Oil) ஆகியன கலந்துள்ளது எனும் குற்றச்சாட்டு தொடர்பில் 2019 ஆம் ஆண்டில் இலங்கை நெருக்கடியொன்றை எதிர்கொண்ட போது, ஹலால் விஞ்ஞான மையம் அதில் தலையிட்டமை குறிப்பிடத்தக்கது. சந்தை மாதிரிகள் தொடர்பான அவர்களது அங்கீகார சோதனையானது, இதில் முக்கிய பங்கை வகித்தது. அதற்கமைய அவ்வாறான எந்தவொரு பொருட்களின் கலப்புகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர்களது சோதனை முடிவுகளின் மூலம் இந்தக் குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டன. சரியான நேரத்திலான அவர்களது இந்த தலையீடானது, நுகர்வோருக்கு நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான உத்தரவாதத்தை வழங்கியது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இக்கூட்டத்தில் தாய்லாந்திற்கான இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான திருமதி ஈ.ஏ.எஸ். விஜயந்தி எதிரிசிங்க மற்றும் தாய்லாந்திற்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் திருமதி ஹாலா யூசுப் அஹமட் ரகாப், இலங்கை, எகிப்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் ஹலால் தடயவியல் விஞ்ஞான ஆய்வகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டதோடு, அங்கு அவர்களுக்கு ஹலால் விஞ்ஞான மையத்தின் அதிநவீன ஆராய்ச்சி மற்றும் சோதனைத் திறன்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது, உலகெங்கிலும் உள்ள நுகர்வோருக்கு ஹலால் சான்றளிக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், விஞ்ஞானத் துறை மற்றும் ஹலால் சான்றளித்தல் ஆகியவற்றில் இலங்கைக்கும் தாய்லாந்திற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.