News

சந்தையில் தொடரும் எரிவாயு தட்டுப்பாடு !

லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், சந்தையில் இன்னும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

லிட்ரோ எரிவாயு விநியோகத்துடன் ஒப்பிடுகையில், லாஃப்ஸ் எரிவாயு கையிருப்பு கிடைக்காததால் லாஃப்ஸ் நுகர்வோர் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அத்துடன், லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர்களிடம் போதிய கையிருப்பு இல்லாத காரணத்தினால், கையிருப்பு வரும் நேரத்தைக் கண்காணித்து, பல மணிநேரம் வரிசையில் காத்திருந்த பின்னரே சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நுகர்வோர் கூறுகின்றனர்.

கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மேல் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் எரிவாயு தட்டுப்பாடு கடுமையாக நிலவுகிறது. அத்துடன் குருநாகல், கண்டி மற்றும் இரத்தினபுரி உள்ளிட்ட ஏனைய அனைத்து மாவட்டங்களின் நகர்ப்புறங்களிலும் இந்தத் தட்டுப்பாடு காணப்படுவதாக நுகர்வோர் மேலும் தெரிவித்தனர்.

கிடைக்கின்ற எரிவாயு கையிருப்பு போதுமானதாக இல்லாததால் நுகர்வோர் வரிசையில் நின்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விற்பனையின் போது உணவகங்கள் போன்ற வணிக இடங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

போதிய கையிருப்பு கிடைக்காததால் தாங்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், விலை அதிகரிப்பிற்குப் பின்னராவது போதிய கையிருப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்களிடம் வினவியபோது, தங்களால் இயன்றவரை அதிகபட்ச கையிருப்பை விநியோகித்து வருவதாகவும், வரும் நாட்களில் வரிசையின்றி சாதாரணமாக எரிவாயுவை கொள்வனவு செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Recent Articles

Back to top button