ஏறாவூர் புன்னக்குடா வீதியில் உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு.

(ஏறாவூர் நஸீர் -ISD)
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர் பொலிஸ் பிரிவில் நேற்று (12/09) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் அம்மன் வீதி, தளவாயை சேர்ந்த அழகன் அஜித் குமார்(27) என்ற இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்,
செங்கலடி ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நிரந்தர ஊழியராக கடமையாற்றிய இவர், சம்பளமற்ற விடுமுறையில் இரு வருடங்கள் மலேசியா சென்று கடந்த இரு மாதங்களுக்கு முன்பே நாடு திரும்பி மீண்டும் வேலையில் இணைந்து கொண்டவராவார்.
கடந்த ஒரு வாரமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில்
இரவு நேரத்தில் கடமையாற்றிய இவர் நேற்று (12/09) காலை 05.30 க்கு வீடு வந்து காலை 09.00 மணியளவில் நன்பர்களுடன் ஒன்றுகூடல்
ஒன்றுக்காக மோட்டார் சைக்கிளில் சென்று மாலை வேளை வீடு திரும்பும் போது ஏறாவூர் புன்னக்குடா வீதியோரமாக பழைய கூரை ஓடுகளை ஏற்றி இறக்கிக்கொண்டிருந்த சிறிய ரக உழவு இயந்திரத்தின் பின் பகுதியில் பலமாக மோதுண்டதால் கழுத்து உடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார்.
விடயமறிந்த ஏறாவூர் பொலிசார் சம்பவ இடத்துக்கு சென்று ,சடலத்தை பார்வையிட்டு பிரதேச மரண விசாரணை அதிகாரி MSM.நஸீர் அவர்களின் விசாரணைகளை தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றிரவே அனுப்பி வைக்கப்பட்டது.
நன்பர்களுடன் ஒன்றுகூடலுக்காக சென்ற இவர் மது போதையுடன் தலைக்கவசத்தை சைக்கிளில் கொழுவி வைத்துக்கொண்டு அதி வேகமாக மோட்டார் சைக்கிளில் வீடுநோக்கி செல்லும்போதே குறித்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இன்று (13/09) பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொள்கின்றனர்.

