2025ஆம் ஆண்டில் இலங்கையில் 80 மில்லியன் டாலர் காணாமல் போயுள்ளது..- IMF
சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள 143 பக்கங்களைக் கொண்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டில் இந்த நாட்டிலிருந்து 80 மில்லியன் அமெரிக்க டாலர் பணம் காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாடலி சம்பிக்க ரணவக்க மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஆகியோரே இந்த விபரங்களை வெளியிட்டனர்.
அத்துடன், 2024ஆம் ஆண்டில் இந்த பற்றாக்குறை மறை (Minus) 254 மில்லியன் டாலர்களாகப் பதிவாகியிருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார். இந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து 2025ஆம் ஆண்டில் மறை 808 மில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மத்திய வங்கியின் 80 மில்லியன் டாலர் பணம் வெளியேறியுள்ளதா அல்லது ஏதேனும் அழிவு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மத்திய வங்கி நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிக்கையின்படி, மத்திய வங்கியின் 80 மில்லியன் டாலர் பணம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவே தெரிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர தெரிவித்தார்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 808 மில்லியன் டாலர்களைக் கருத்திற்கொள்ளும் போது, நாட்டிற்கு வரும் பணம் (வெளிநாட்டுப் பிரேஷணங்கள்) முழுமையாக நாட்டிற்குள் வராமல், மறைமுகமான அல்லது சட்டவிரோத வழிகள் ஊடாக இந்த பணம் இழக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஷிரான் ரணசிங்க / கமல் சுரவீர


