News

நாங்கள் முழு இலங்கையையும் வெல்லுவோம் என்பதை உறுதியாக கூறுகிறேன் – மேலும் இஸ்லாமியர்களுக்கு அநீதி நிகழ்ந்த போது நாங்கள்தான் பேசினோம் ; சஜித்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பிற்பாடு கோட்டாபாய ஜனாதிபதியானார் அதனால் எங்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிகமான வீடுகள் இடைநிறுத்தப்பட்டன என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில், 

நான் உறுதியாக கூற விரும்புகிறேன் எதிர்வரும் 21 ஆம் திகதி முழு இலங்கையையும் வெல்லுவோம் வென்றதன் பின்னர் இந்தப் பகுதியில் காணப்படுகின்ற அனைத்து வீடுகளையும் செய்து தருவோம். 

அது மாத்திரமல்ல காணி இல்லாமல், வீடு இல்லாமல் காணப்படும் அனைவருக்கும் கம் உதாவ திட்டத்தின் கீழ் வீடுகள் தருவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் தொழில்வாய்ப்பின்றி காணப்படுகிறார்கள்.

ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் தோறும் உற்பத்தி தொழில் பேட்டைகளை உருவாக்கி இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பினை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.

அதன் மூலம் தகவல் தொழிநுட்பம், ஆங்கில அறிவு, கணனி மேம்பாடு போன்றவற்றை உருவாக்கி அனைத்து இளைஞர்களுக்கும் வாழ்வாதாரத்தில் பாரிய புரட்சியை உண்டு பண்ணுவோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 361 பாடசாலைகள் காணப்படுகின்றன அனைத்துப் பாடசாலைகளையும் நாங்கள் ஸ்மார்ட் பாடசாலைகளாக எதிர்காலத்தில் உருவாக்கவுள்ளோம்.

அதேபோல, அதிகமான வைத்தியசாலைகள் காணப்படுகின்றன அந்த வைத்தியசாலைகளையும் ஸ்மார்ட் வைத்தியசாலைகளாக ஆக்கவுள்ளோம்.

கல்வியில் ஒரு வித்தியாசத்தை, புரட்சியைக் கொண்டு வரவுள்ளோம். சுகாதார துறையில் ஒரு மேம்பாட்டைக் கொண்டு வரவுள்ளோம்.

பாடசாலை சமூகத்தை நிச்சயமாக மேம்படுத்துவோம். சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிச்சயமாக தீர்த்து வைப்போம்.

விவசாயிகள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவர்களுக்கு 50 கிலோ எடையுடைய பசலையினை ஐயாயிரம் ரூவாய்க்கு வழங்கவுள்ளோம்.

அத்துடன், விவசாயிகள் யானை பிரச்சினைகளால் அவதிப்படுன்றனர். அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவோம்.

வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை மேம்படுத்தித் தருவதோடு, ஓட்டமாவடி கலாச்சார மத்திய நிலையத்தை அபிவிருத்தி செய்து தருவோம்.

இந்தப் பகுதியில் காணிப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்கான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டு மைதானத்தை நவீயின மைதானமாக புனரமைத்துத் தருவோம்.

இந்த நாட்டில் வாழக்கூடிய இனங்கள், ஜாதிகள், மதங்களை கடந்து அனைத்து மக்களையும் நாங்கள் நேசிக்கின்றோம்.

கடந்த காலங்களில் இஸ்லாமியர்களுக்கு விரோதமாக பாரிய அநீதி நிகழ்ந்தது.

கொரோனா உடல்கள் தகனம் செய்யப்படும் போது அதற்கு பாராளுமன்றத்திலும் வெளியிலும் எதிர்ப்பு தெரிவித்து அது தொடர்பாக பேசியவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியினர் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அந்தக் கால கட்டத்தில் ரணில் விக்ரம சிங்கவும், அநுர குமார திஸாநாயகவும் அந்த இடத்தை விட்டு பாய்ந்து சென்று விட்டார்கள்.

இன்று அவர்கள் இனங்களிடையே ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள்.

இந்த நாட்டில் காணப்படும் தமிழ், சிங்கள, முஸ்லிம், வேர்க்கர் ஆகிய அனைத்து மக்களுடைய ஒற்றுமைக்காகவும், சமத்துவத்துக்காகவும் பாடுபடக் கூடிய ஒரேயொரு கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி என்பதை தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன். என்றார்.

எச்.எம்.எம்.பர்ஸான்

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button