ஐயாயிரம் ரூபா இலஞ்சம் பெற்று சிக்கிய பொலிஸ் சார்ஜன்ட்டை அடுத்த மாதம் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
பொலிஸ் சான்றிதழ் வழங்குவதற்காக இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட்டுக்கு 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் வழக்கை குறிப்பிடாமல் பொலிஸ் சான்றிதழ் வழங்குவதற்காக நபரிடம் 5000 ரூபா இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் பொத்துஹெர பொலிஸ் சார்ஜன்ட்டை அடுத்த மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் வழக்குத் தொடுத்த நபருக்கு பொலிஸ் அறிக்கை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காகவே இந்த இலஞ்சம் கோரப்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றில் மேலும் தெரிவித்தது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பேரில், பொத்துஹெர பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக இலஞ்சம் பெறும்போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ள காரணங்களை பரிசீலித்த பிரதான நீதவான் சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்ததுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை அடுத்து அவரை எதிர்வரும் எட்டாம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.