News

இந்திய பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் 2024 ஒக்டோபர் 04 ஆம் திகதி கொழும்புக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இவ்விஜயத்தின்போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்திருந்த அவர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவையும் சந்தித்ததுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் உடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் சந்தித்திருந்தார்.

இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் உடனான தனது கலந்துரையாடல்களின்போது, அயலுறவுக்கு முதலிடம் கொள்கை மற்றும் சாகர் (SAGAR) கோட்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இருதரப்பு ஒத்துழைப்பினை மேலும் முன்னேற்றுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டினை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். இலங்கையின் முன்னுரிமையின் அடிப்படையிலான பணித்திட்டங்கள் ஊடாக இலங்கைக்கு இந்தியா வழங்கிவருகின்ற அபிவிருத்தி உதவிகள் தொடருமெனவும் அவர் உறுதியளித்திருந்தார்.

அந்த அடிப்படையில் காங்கேசன்துறை துறைமுகத்தினை 61.5 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடை ஊடாக நவீனமயப்படுத்துவதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் கடனுதவித் திட்டங்களின் கீழ் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் நிறைவேற்றப்பட்ட 7 பணித்திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை நன்கொடைத்திட்டங்களாக மாற்றமுடியுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை புகையிரத சேவைகளுக்காக டீசலில் இயங்கும் 22 புகையிரத எஞ்சின்களை அன்பளிப்பாக வழங்குவதற்கும் இந்தியா தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி உடனான சந்திப்பின்போது எரிசக்தி உற்பத்தி மற்றும் பரிமாற்றம், எரிபொருள் மற்றும் LNG விநியோகம், வழிபாட்டுத்தலங்களுக்கான சூரியக்கல மின்மயமாக்கல், இணைப்புகள், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, சுகாதாரம், மற்றும் பால்துறை அபிவிருத்தி குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் உரையாடியிருந்தார். இவ்வாறான துறைகள் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு பங்களிப்பு வழங்கும் அதேவேளை வருமானத்துக்கான புதிய மார்க்கங்களையும் உருவாக்குமென அவர் சுட்டிக்காட்டியிருந்தார். செழிப்புமிக்க ஓர் இலங்கைக்கான தனது நோக்கினை நனவாக்குவதிலும் மக்களின் அபிலாஷைகளை நிவர்த்தி செய்வதிலும் இந்தியாவின் பொருளாதார ஆதரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என இலங்கை ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார். அத்துடன் புதுப்பிக்கத்தக்க சக்தியினை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆற்றல்கள் குறித்து தெரிவித்திருந்த அவர், இலங்கையில் உற்பத்திச் செலவினை குறைப்பதற்கும் மேலதிக வளங்களை உருவாக்குவதற்கும் இது ஆதரவாக அமையுமெனவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் பங்களிப்பு தொடர்பாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டதுடன் இத்துறையானது மேலும் வளர்வதற்கான சாத்தியங்களை கொண்டிருப்பதனையும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர், தலைமைத்துவத்துடன் மேற்கொண்ட உரையாடல்களின்போது, இந்திய முதலீடுகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல், இலங்கையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கல், மற்றும் இந்திய சுற்றுலாப்பயணிகளின் வருகையினை அதிகரித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் ஆளுமைவிருத்தி தேவைகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றினை நிவர்த்திசெய்வதற்கும் இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனான சந்திப்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் மூலமான நலன்கள் குறித்தும் அவர்களது சந்திப்பில் கவனஞ்செலுத்தப்பட்டிருந்தது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகள் தொடர்பில் கூறியிருந்த வெளியுறவுத்துறை அமைச்சர், ஆரம்பம் முதலே இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்காக இந்தியா ஆதரவளித்துவந்ததாக நினைவூட்டியிருந்தார். இந்தியா முதலாவதாக நிதி உத்தரவாதத்தினை வழங்கியிருந்ததுடன் அதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியம் நீடிக்கப்பட்ட நிதி வசதி குறித்த இறுதி தீர்மானத்தை மேற்கொள்ள வழிகோலப்பட்டது. நாட்டிற்கான சர்வதேச முறிகளின் உரித்தாளர்களுடனான உடன்படிக்கைகள் தொடர்பாக உத்தியோக பூர்வ கடன் வழங்குனர்கள் சபையில் இந்தியாவின் ஆதரவை வெளியுறவுத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தினார். இலங்கையுடனான தனது இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கைகள் நிறைவேற்றப்படுவதனை துரிதப்படுத்துவதற்கும் இந்தியா விரும்புகின்றது. இவ்விடயத்தில் ஜனாதிபதியும் தனது பாராட்டுகளை தெரிவித்திருந்தார்.

பாதுகாவல் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா மற்றும் இலங்கையின் நலன்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளமையை இச்சந்திப்புகள் வெளிக்காட்டியிருந்தன. இரு நாடுகளினதும் ஒத்துழைப்பு பரஸ்பர நலன்களை அடிப்படையாகக் கொண்டதுடன் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கும் பங்களிப்பினை வழங்குகின்றது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஆகியவற்றினை ஊக்குவிப்பதற்காக தொடர்ச்சியான பேச்சுக்கள் அவசியமானதெனவும் இவ்விஜயத்தின்போது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதேவேளை, இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கையின் ஆட்புலத்தினை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாதென ஜனாதிபதி வலியுறுத்தியிருந்தார்.

இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் கவலையினை வெளியிட்டிருந்தார். இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுதலைசெய்யப்படவேண்டுமெனவும், அவர்கள் மீதான கடுமையான அபராதம் குறித்தும் மறுபரிசீலனை செய்யப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்த மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையானது, இந்த விவகாரத்தை தீர்த்துவைப்பதற்கான ஒரு நிலையான அடித்தளத்தினை உருவாக்கும். மீன்பிடித்துறை மற்றும் மீனவர் சங்கங்கள் குறித்த கூட்டுப் பணிக் குழு கூட்டம் உரிய காலத்தில் நடத்தப்படும். மேலும், 50 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டமையை வெளியுறவுத்துறை அமைச்சர் பாராட்டியிருந்தார்.

இனப்பிரச்சினை சார்ந்த விவகாரங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் ஒற்றுமை, ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பேணுகின்ற அதேவேளை தமிழ் மக்கள் உள்ளிட்ட சகல சமூகங்களினதும் சமத்துவம், நீதி , கௌரவம், சமாதானம் ஆகியவற்றுக்கான அபிலாஷைகளுக்கான இந்தியாவின் ஆதரவினை வெளியுறவுத் துறை அமைச்சர் மீள வலியுறுத்தியிருந்தார். இந்த இலக்கை எட்டுவதற்கு இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தினை முழுமையாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் அமுல்படுத்துதல் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை முற்கூட்டியே நடத்துதல் ஆகியவை வழிசமைக்கும்.

பரஸ்பரம் பொருத்தமான ஒரு திகதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி சார்பாக வெளியுறவுத் துறை அமைச்சரால் ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதே நேரம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை வருமாறு ஜனாதிபதி அநுர குமார திசநாயக்கவுக்கு அழைப்பு விடுத்தார்.

Recent Articles

Back to top button