News

அனுர அரசு அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள்; அமெரிக்க தூதுவரிடம் தமிழ்த்தரப்பு எடுத்துரைப்பு

தற்போதைய ஆட்சியாளர்கள் அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என தமிழ் தரப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோர் அமெரிக்க தூதுவரை சந்தித்தவேளையிலேயே மேற்படி விடயம் எடுத்துக்கூறப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன்,

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதுவர் முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அநுரகுமார திஸாநாயக்க எப்படி தமிழர்களை கையாள்வார் என்பது தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அந்தவகையில், கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் செய்த செயற்பாடுகளை சுட்டிக்காட்டி இவர்கள் அதிகார பகிர்விற்கு சாதகமாக இருக்கமாட்டார்கள் என்பதை அவரிடம் சுட்டிக்காட்டினோம்.

அதேவேளை நாங்கள் அரசாங்கத்தில் சேர்வதோ அல்லது அதன் ஒரு அங்கமாக இருப்பதோ என்பது நடக்கமுடியாத விடயம். தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியான விடயத்தை செய்ய மாட்டோம் எனவும் தெரிவித்தோம்.

இது தொடர்பில் பொதுத் தேர்தல் முடிந்த பிற்பாடு ஜனாதிபதியுடன் கதைப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Recent Articles

Back to top button