லொஹான் ரத்வத்த கல்லீரல், நுரையீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை மருத்துவமனை அறிக்கையும், ஏற்கனவே சிறைச்சாலை அமைச்சராகஇருந்ததால் விஷேட பாதுகாப்பு வழங்க நீதவான் உத்தரவும் வழங்கப்பட்டது.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த விளக்கமறியலில் வைக்கப்பட்டதன் பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய, லொஹான் ரத்வத்த முன்னாள் சிறைச்சாலை அமைச்சராக இருந்ததன் காரணமாக அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்கவும், மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ளவும் நீதவான் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சிறைச்சாலை வைத்தியரின் பரிந்துரையின் பேரில், கடந்த 31ஆம் திகதி முதல் தங்கியிருந்து மருத்துவச் சிகிச்சைகளை மேற்கொள்வதற்காக அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் அமைச்சரின் உடல் நிலை குறித்து சிறைச்சாலை வைத்தியசாலையில் இருந்து அறிக்கை வரவழைக்கப்பட்ட நிலையில், அவருக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் கல்லீரல், நுரையீரல் மற்றும் கணையம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை விசேட மருத்துவரிடம் அனுப்ப வேண்டும் என்று சிறைச்சாலை மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் இராஜாங்க அமைச்சர் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் வைத்தியரின் பரிந்துரையின் அடிப்படையில் மீண்டும் சிறைக்கு அனுப்பப்படுவார் எனவும் சிறைச்சாலை ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது