ஹிஸ்புல்லா ஒரு முனாஃபிக் – அவருக்கும், மரச் சின்னத்துக்கும் வாக்குப் போட வேண்டாம் என அலிசாஹிர் மௌலானா வாக்காளர்களிடம் வேண்டுகோள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திற்கும் அக்கட்சியில் போட்டியிடுகின்ற ஹிஸ்புல்லாவுக்கும் ஏறாவூர் மக்கள் ஒரு வாக்கினையேனும் போட்டு விடக்கூடாது என முன்னாள் அமைச்சர் அலிசாஹிர் மௌலானா ஏறாவூர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.
ஏறாவூர் பிரதேசத்தில் நேற்று (08) இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொட்டும் மழைக்கு மத்தியில் பெருந்திரளானோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் ஏறாவூர் மண்ணையும் மக்களையும் நேசிப்பவன், இந்த மக்களின் இன்ப துன்ப விடயங்களில் பங்கெடுப்பவன். இந்த மக்களுக்காக செயல்படுகின்ற என்னை தோற்கடிப்பதற்காகவே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் மிகத் திட்டமிட்டு ஹிஸ்புல்லாவை மீண்டும் இந்தக்கட்சிக்குள் கொண்டு வந்து எனக்கு சதி செய்தார்.
அகதிகளுக்காக வந்த பணத்தை சூறையாடியவர் தான் இந்த ஹிஸ்புல்லா அதை நான் பாராளுமன்றத்தில் ஆணித்தரமாக பேசியிருக்கின்றேன்.
நான் பேசிய விடயங்கள் இன்னும் ஹன்சாட்டில் உள்ளது. விரைவில் அவற்றை ஒரு புத்தகமாக வெளியிடவுள்ளேன்.
ஏறாவூர் பிரதேச வாக்குகள் காத்தான்குடியை விட எண்ணிக்கையில் சற்று குறைவாக காணப்படலாம், அதேபோன்று கல்குடாவை விடவும் எண்ணிக்கையில் குறைவாகக் காணப்படலாம். எங்களுடைய வாக்குகள் இல்லாமல் எந்தக் கொம்பனும் எம். பி ஆக முடியாது.
ஏறாவூர் மக்களை ஏமாற்றுவதற்காக மீராகேணி, சதாம் ஹுசைன், மிச்சி நகருக்கும் மற்றும் ஏறாவூரின் ஏனைய பகுதிகளுக்கும் ஹிஸ்புல்லா வருகிறார்.
ஹிஸ்புல்லா ஒரு முனாஃபிக். ஏறாவூர் மக்கள் ஒரு வாக்கினையும் அவருக்கும் அவருடைய மரச்சின்னத்துக்கும் கொடுக்கக்கூடாது எனவும் அலிசாஹிர் மௌலானா தெரிவித்தார்.

