News

அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநித்துவம் இல்லை என்பதற்காக நாம் சளைத்து விடப் போவதில்லை!

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களும் எதிர்க்கட்சி அரசியல் செய்தவர்களும் நாட்டை இன்றைய வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள் என்ற ஒரே காரணத்தை முன்வைத்து அத்தகைய வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற இலக்குடன் மக்கள் எழுச்சி அரகலய ஏற்பட்டது.

அந்த மகத்தான மக்கள் எழுச்சியின் ஜனநாயக முகமாக வடிவமாக தேசிய மக்கள் சக்தி களம் கண்ட பொழுது அழிவின் விளிம்பிலிருந்து தேசத்தை மீட்கும் பணியில் இனமத மொழி பேதங்கள் மறந்து நாட்டின் நாளா திசையிலும் மக்கள் தேசிய மக்கள் சக்தியிற்கு பலத்த ஆதரவைத் தந்தார்கள்.

சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையில் முளைவிட்ட தேசிய இனப்பிரச்சினை பிரிவினை வாதமாக வளர்ந்து பின்னர் வன்முறை வடிவங்களைப் பெற்று மூன்று தசாப்த கால யுத்தமாக வெடித்து இருதரப்பிலும் உயிர் உடமை இழப்புகளுடன் பல்லாயிரம் கோடி (சுமார் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) பொருளாதார இழப்பையும் நாடு சந்தித்தமை அதனை அழிவின் விளிம்பிற்கு இட்டுவந்த பிரதான காரணமாகும்.

உள்நாட்டு இனப்பிரச்சினையை மாறிமாறி ஆட்சிக்கு வந்தவர்களும் எதிர்க்கட்சிகளும் கையாண்ட விதம் அது எமது கரங்களில் இருந்து பிராந்திய சர்வதேச சக்திகளின் தலையீட்டிற்கு இட்டுச் சென்றதும் இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் அவற்றின் மேலாதிக்க போட்டா பேட்டியின் பகடைக் காயாக ஆக்கப்பட்டதும் எரிகிற வீட்டில் எண்ணெய் வார்க்கும் நிலையை ஏற்படுத்தியது.

குறிப்பாக போருக்கு பின்னரான இலங்கையில் அத்தகைய பிராந்திய சர்வதேச சக்திகளின் மூலோபாய நிகழ்ச்சி நிரல்களின் பகடைக்காயாக  இரண்டாவது சிறுபான்மை சமூகமான முஸ்லிம்கள் ஆக்கப்பட்டமையும் உள்நாட்டு பெருந்தேசியவாத சக்திகளை மற்றும் இனமத வெறி கூலிப்படைகளை அவற்றின் இலக்குகளுக்கு ஏற்ப நகர்தியமையும்  தேசத்தின் அமைதி சமாதானம் அரசியல் ஸ்திரத்தன்மை பொருளாதார சுபீட்சம் என சகல அடித்தளங்களையும் ஆட்டங் காணச் செய்தன.

மேற் சொன்ன பிரதான காரணங்களோடு தலைதூக்கிய ஊழல் மோசடிகள் நிறைந்த அரசியல் கலாசாரம், அரச நிர்வாகம், பாதாள உலகின் செல்வாக்கு, வர்த்தக வியாபார ஏகபோக மாஃபியா, போதைவஸ்து ஆயுதம் மற்றும் ஆட்களை கடத்தும் மாஃபியா என பல்வேறு காரணிகளால் இந்த நாடு அழிவின் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய நிலையில் எமது தேசத்தின் மொத்த தேசிய உற்பத்தியை விடவும் அதிகரித்த உள்நாட்டு பிறநாட்டு கடன் சுமை சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது, வருடாந்தம் வட்டியும் முதலுமாக அதனைச் செலுத்த சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகின்றன, அதனைச் செலுத்த முடியாமல் நாடு பொருளாதார வங்குரோத்து நிலையை பிரகடனம் செய்து கொண்டுள்ளது.

அவற்றின் விளைவாக வெளிநாட்டுச் செலாவணி கையிருப்பு வீழ்ச்சி கண்டுள்ளது, பணவீக்கம் அதிகரித்திருக்கிறது, வாழ்க்கைச் செலாவணி பன்மடங்காக உயர்ந்திருக்கிறது, நாட்டின் சகல துறைகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

நாட்டின் திறந்த பொருளாதாரக் கொள்கை பிழையாக கையாளப்படுகிறது, வெளிநாட்டு முதலீடுகள் முறைகேடுகளுடன் கையாளப்பட்டன, நாட்டின் வளங்கள் பிறநாடுகளின் நலன்களுக்காக பேரம் பேசப்படுகின்றன.

இந்த நிலையில் தான் வங்குரோத்து அரசியல் கலாசாரத்திற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கவும் நாடு எதிர் கொண்டுள்ள சமூக அரசியல் பொருளாதார சவால்களுக்கு நிலையான தீர்வுகளை காணவும் ஒரு தேச மக்களாக நாம் தேசிய மக்கள் சக்தியாக எழுந்து நின்றோம்.

இந்நிலையில் 75 வருட கால வரலாற்றை நாம் ஒரு தேசமாக மீள் வாசிப்புச் செய்து வரலாற்றைத் திருத்தி எழுத நாம் தயாராகிக் கொண்டிருக்கிறோம், வரலாற்றைத் திருப்பி எழுத முற்படும் நாம் மீண்டும் அதே தவறுகளை செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

பல்லின பலமத பல மொழி பல கலாசார பண்புகளைக் கொண்ட இந்த அழகிய தேசத்தில் அரசியலமைப்பினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அனைத்து சமூகங்களினதும், தனித்துவ அடையாளங்கள், சமய கலாசார உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளுக்குமான உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்பதில் நாம் திடமான நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அது அரசோ அரச நிர்வாக யந்திரமோ, பொதுச் சேவைகளோ, அதிகாரப் பரவலாக்கமோ, கல்வி உயர்கல்வி மற்றும் அரச வளப்பங்கீடுகளோ எதிலும் எந்தவொரு சமூகமும் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடாத்தப்படுவதனை நாம் ஒரு தேச மக்களாக நிராகரிக்கின்றோம்.

இன்னுமொருமுறை இந்த தேசத்தை இனவாதமோ பேரின வாதமோ காவு கொள்வதனை  மூன்றாம் சக்திகள் தமது பூகோல அரசியல் நலன்களுக்காக அவற்றில் தலையீடு செய்வதனை நாம் அனுமதிக்க முடியாது.

இன மத மொழி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒரு தாய் மக்களாக இரண்டாவது சிறுபான்மைச் சமூகமாக, முஸ்லிம் உலகின் ஓர் அங்கமாக எமது தேசத்திற்கான கடமைகளை ஜனநாயக மைய நீரோட்டத்தில் நாம் செய்து கொண்டிருக்கிறோம், இனியும் தொடர்ந்து செய்வது எமது தார்மீகக் கடமை என்பதில் தெளிவாகவும் இருக்கிறோம்.

மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
✍️ 22.11.2024 ||SHARE

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button