News

அனுரவின் திசைகாட்டி அரசாங்கம் முஸ்லிம் ஒருவரை அமைச்சரவைக்கு உள்வாங்காததை கட்சியின் தீவிர ஆதரவாளர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது

அனுரவின் திசைகாட்டி அரசாங்கம் முஸ்லிம் ஒருவரை அமைச்சரவைக்கு உள்வாங்காதமை அவர்களின் ஆதரவாளர்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும் – ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !

நூருல் ஹுதா உமர்

நாடு யுத்தம், அனர்த்தங்கள், அரசியல் நெருக்கடிகள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற பலவற்றிலும் சிக்கித் தவித்த சந்தர்ப்பங்களில் அவற்றிலிருந்து நாட்டை மீட்க முஸ்லிம் அமைச்சர்களின் வகிபாகம் அதிகமாக இருந்துள்ளதை நாம் அறிவோம். இப்படியான நிலையில் அமைச்சரவைக்குள் முஸ்லிங்கள் உள்வாங்கப்பட்டமைக்கு காரணமாக முஸ்லிம் எம்.பிக்கள் அனுபவமற்ற தன்மை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி பிரமுகர்கள் கூறும் காரணங்கள் அவர்களின் வேட்பாளர்கள் அவர்களே குறைத்து எடை போடும் விதமாக அமைந்துள்ளது. இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவதில் இருந்து அவர்கள் விடுபட்டு திறமையான பலரும் தேசிய மக்கள் சக்தி சார்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்கள் அனுப்பியுள்ளார்கள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நியாயமான முறையில் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமன்றி அவர்களுக்கு வாக்களிக்காத ஏனைய கட்சி ஆதரவாளர்களுக்கும் இருந்தது. அவர்களது அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து வீணான செலவுகள் கட்டுப்படுத்துவதில் அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மக்கள் மத்தியில் அவர்களை பற்றி நம்பிக்கையை கொண்டு வந்துள்ளதுடன் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவேண்டிய உரிமையை வழங்க மறுத்ததனூடாக முஸ்லிம் சமூகத்தின் அதிருப்தியையும் அவர்கள் எதிர் கொண்டுள்ளார்கள்.

நாங்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிக்காதவர்களாக இருந்த போதிலும் அவர்களின் நாட்டுக்கு நன்மையான வேலைத்திட்டங்களையும், முன்னெடுப்புக்களையும் ஆதரிக்கிறோம். உதாரணமாக குறைந்த செலவில் தேர்தல் நடத்தியது, வன்முறைகள் இல்லாத வகையில் தேர்தலை நடத்தியது, வாக்காளர்களுக்கு தேர்தல் கால லஞ்சத்தை வழங்காமை, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கான சலுகைகளில் கட்டுப்பாடு போன்ற பல விடயங்களை கூறலாம். இப்படியான முன்மாதிரிகளை நாங்கள் வரவேற்கிறோம். அதே நேரத்தில் தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மை மக்கள் அதிலும் குறிப்பாக முஸ்லிம் சமூகம் ஏன் கணிசமான வாக்குகளை வழங்கினார்கள் என்பதையும் நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது.

தமது சமூக அரசியல் தலைமைகளிடமிருந்து மக்கள் எதிர்பார்த்த அரசியல் அடைவுகளை அவர்கள் ஒழுங்கான முறையில் கடந்த காலங்களில் வழங்காமையினாலும், அரசியல் தலைவர்கள் சமூகம் எதிர்பார்த்த விடயங்களில் சிறப்பாக செயற்படாமையினாலும் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் விரக்தி காரணமாகவே தேசிய மக்கள் சக்தியை நோக்கி சிறுபான்மை மக்கள் அணி திரண்டார்கள். இந்நிலையில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு பிரதிநிதியையாவது அமைச்சரவைக்குள் உள்வாங்காமல் விட்டது ஏமாற்றமளிக்கிறது. இவ்வாறான நிலைகளிலிருந்து விடுபட்டு தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால நடவடிக்கைகள் சிறுபான்மை முஸ்லிம் மக்களை அரவணைத்து செல்லும் விதமாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் கூட அமைச்சரவையில் ஒரு சமூகம் சார்ந்தவர் இருப்பது என்பது அந்த சமூகத்துக்கான அங்கீகாரம் என்பதை ஒத்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் அவ்வாறான அங்கீகாரம் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கவில்லை. இந்த நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து அமைக்கப்பட்ட சகல அமைச்சரவையிலும் முஸ்லிம்கள் இடம்பெற்று வந்ததுடன் அவர்கள் எல்லோரும் நாட்டுக்கும், தன் சமூகத்திற்கும் நிறையவே சேவையாற்றியுள்ளார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. கடந்த 10-15 வருடங்களில் அமைச்சராக இருந்த ஒரு சிலரை தவிர வரலாற்று நெடுகிலும் முஸ்லிம் அமைச்சர்கள் நாட்டுக்கும், முஸ்லிம்களுக்கும் நிறைய சேவைகளை வழங்கி உள்ளதை நாம் இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும், நாட்டின் அந்நிய செலாவணி ஒழுங்குபடுத்தல் கள், உள்நாட்டு உற்பத்தி மேம்பாடுகள், ஏற்றுமதி, இறக்குமதி விடய சீரமைப்புகள் போன்ற பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து பொருளாதார கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி நாட்டை சிறப்பாக முன்னேற்ற தேசிய மக்கள் சக்தி எடுக்கும் முயற்சிகள்  மக்களிடம் வரவேற்பை பெற்று வரும் இந்நிலையில் சிறுபான்மை சமூகமொன்று பாதிக்கும் விதமாக அரசாங்கம் நடப்பது நாட்டுக்கும், நாட்டு மக்களின் எதிர்காலத்திற்கும் சிறப்பாக அமையாது என்றார்.

Recent Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button