எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்களும், கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை உண்ணாவிரதம் தொடரும் என சுரேஷ் சலேயும் அறிவிப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நேற்று அவரது உறவினர்களும் சட்டத்தரணிகளும் அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இதன்போது தான் உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடரப் போவதாக அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளரை பதவியில் இருந்து நீக்குமாறும், தான் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தை மாற்றுமாறு கோரியுமே சுரேஷ் சலே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பல எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்யாக்கிரகப் போராட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்தப் போராட்டக் களத்தில் இரவு முழுவதும் அரசியல் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் போராட்டம் தொடரும் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
யுத்த வீரர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என இந்த நிலைமையை விவரித்த சர்வஜன சக்தி அமைப்பின் பிரதித் தவிசாளர் அனுராதா யஹம்பத், சுரேஷ் சலே விடுதலை செய்யப்படும் வரை இந்த சத்யாக்கிரகம் தொடரும் எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், நீதிமன்றம் இந்த விவகாரத்திற்கு தகுந்த தீர்வை வழங்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.



