“பாராளுமன்றம் மீண்டும் சுத்தம் செய்யப்படுகின்றது.”
![](wp-content/uploads/2024/12/img_7233-1-780x1024.jpg)
எல்லா அரசியல்வாதிகளின் அனைத்து விடயங்களையும் அக்குவேரு ஆணிவேராக ஆராய்ந்து வைத்திருந்த ஜனாதிபதி அநுரகுமார தனது கட்சி சார்ந்த அஷோக ரன்வல பற்றி அறியாமலா இருந்தார்?”
“தங்களைவிட நல்லவர்கள் யாரும் இல்லை என்ற கோசத்தில் வந்த NPPயினர் ஆட்சியமைத்து மிகக் குறுகிய காலத்திலேயே எதிர்விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இலங்கை வரலாற்றில் ஆட்சியமைத்து இவ்வளவு குறுகிய காலத்தில் எந்தவொரு அரசாங்கமும் எதிர்விமர்சனங்களை பெற்றிருந்ததாக வரலாறு இல்லை. கோட்டாபாய கூட இரண்டரை ஆண்டுகளின் பின்னரே எதிர் விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார் என்பதை குறிப்பிட்டுக் காட்டவும் முடியும்”
ஒருவரின் தகுதி தராதரம் எதுவாக இருந்தாலும் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், எமது அரசாங்கத்திலும் எவரேனுமாக இருந்தாலும் அவரை எமது அரசாங்கம் பாதுகாக்காது. என்ற -ஜனாதிபதியின் கூற்று வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை,
சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பான விடயத்தில் தனது பட்டத்தை நிரூபிக்க இன்னும் சிலகால அவகாசம் தேவை என்றாலும் தனது பதவியை இராஜினாமா செய்கிறேன் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்த விடயமானது அரசியல் வரலாற்றில் மிகப் பாரதூரமானவிடயமாகும்.
அசோக ரன்வல்லவை பொறுத்தவரையில் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யின் நீண்டகால உறுப்பினராக இருந்து வருபவர், அவ்வாறெனில் இவ்வளவு காலமும் அவரது போலி கல்வித் தகமையை JVP அறியாமலா இருந்தது?. அல்லது
எல்லா அரசியல்வாதிகளின் அனைத்து விடயங்களையும் அக்குவேரு ஆணிவேராக ஆராய்ந்து வைத்திருந்த அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதி அவர்கள் தனது கட்சி சார்ந்த அஷோக ரன்வல பற்றி அறியாமலா இருந்தார்?
சபாநாயகர் பதவிக்கு கலாநிதி பட்டம் தேவையா? என்பதல்ல இங்கு பிரச்சினை எல்லா அரசியல்வாதிகளையும் பிழையாக காட்டியும், கள்வர் பட்டம் வழங்கியும் அனைத்து சிஸ்டத்தையும் மாற்றுவதற்காக தூயவர்களான நாங்கள் ஆட்சிக்கு வந்து மக்களுக்கான நம்பிக்கை நிறைந்த ஆட்சியை வழங்கப்போகிறோம் என்ற விடயம் வெறும் கோசங்களாக மாறி மக்களுக்கு ஏமாற்றத்தை அல்லது நம்பிக்கைத் துரோகத்தை கொடுத்துள்ளது.
ஒரு கொள்கையின் அடிப்படையில் தூய அரசியலுக்கான பயணத்தை செய்கிறோம் என்று கூறிவருகின்ற JVP க்குள் இவ்வாறானதொரு விடயம் நடைபெற்றமையானது மனவேதனையான ஒன்றாகும்.
அசோக ரன்வல்லவை பொறுத்தவரையில் இம் முறை தனது பாராளுமன்ற தேர்தல்கால பிரச்சார நடவடிக்கைகளில் கூட தனது கல்வித் தகமைகளை முன்னிறுத்தியே மக்களிடம் வாக்குகளை பெற்றது கூட JVP க்கு தெரிந்திருக்க வாய்ப்புண்டு என்றாலும் அவை கண்டுகொள்ளப்பட்டிருக்கவில்லை.
அதுமாத்திரமல்ல அறுதிப்பெரும்பாண்மையான 2/3 பெரும்பாண்மை அதிகாரத்தைப் பெற்ற ஒரு அரசாங்கத்தின் சபாநாயகர் புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் பதவி விலகுவதானது அவ் அரசாங்கத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கின்ற விடயமாகும்.
ஏன் இந்த விடயம் பாரதூரமாக பார்க்கப்படுகின்றது?
சாதரண குடிமகன் தவறு செய்வதற்கும், வழக்கறிஞர் அல்லது நீதிபதி தவறு செய்வதற்கும் அளவீட்டு வித்தியாசம் உண்டு. என்ற எடுகோல் உதாரணத்தின் மூலம் இவ்விடயத்தை பார்ப்போமானால்,
சபாநாயகர் என்ற பதவியானது பாராளுமன்றத்தை தலைமை தாங்குவது மாத்திரமல்ல இந்த நாட்டில் உருவாக்கப்படுகின்ற உயரிய சட்டங்களுக்கு இறுதி அங்கீகாரம் வழங்கப் பயன்படும் ஒரு உயரிய பதவியுமாகும் இவ்வாறான பதவிக்கு போலி கல்வித்த தகமையைக் கொண்டு தன்னை அடையாளப்படுத்திய ஒருவரை எவ்வித ஆராய்வும் இல்லாமல் NPP நியமித்தமையானது ஒரு பாரதூரமான விடயமாகும். இவ் விடயத்தில் இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் அசோக ரன்வல்ல அவர்களது பல்கலைக்கழக பட்டப்படிப்பும் கேள்விக்குட்படுத்தப்படுவதை அவதானிக்கலாம்.
அதேநேரம் அநுரவுக்கு வாக்களித்தவர்கள் எல்லோரும் JVP ஆட்களோ அல்லது NPP ஆட்களோ கிடையாது அவ்வாறு நாம் முத்திரைகுத்தவும் முடியாது மாறாக இலங்கை அரசியலில் ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நினைத்தவர்களாகவும், இலங்கை அரசியலில் மூன்றாம் சக்தியின் தேவையை உணர்ந்தவர்களாகவுமே பெரும்பாலானவர்கள் இருந்தார்கள் என்றாலும் இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நம்பிக்கையீனங்களே ஏற்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்ளும் நிலமையே இருக்கின்றது.
MLM.சுஹைல்
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/wtsbanner.jpg)
![](https://madawalaenews.com/wp-content/uploads/2024/07/fbbanner.jpg)